`கச்சத்தீவை மீட்க இதுவே தருணம்; நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தாருங்கள்'- மேடையிலேயே பிரதமரை வலியுறுத்திய முதல்வர்

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 31,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். தனி விமானத்தில் சென்னை வந்த அவருக்குத் தமிழக அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு எடுத்து வைத்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், ``தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவோடு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் முதல் அரசு விழா இது. தமிழ்நாட்டில் 5 நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கும் 3 ரயில்வே திட்டங்களுக்கும், நகர்ப்புற வசதி திட்டத்தின் கீழ் 1152 வீடுகளின் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டங்கள். தமிழ்நாடு பல்வேறு வகையிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகையிலும் சிறந்த பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியிலே தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது மிகமிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விடத் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது. இந்த வளர்ச்சியானது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டும் அல்ல. சமூக நீதி பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிகுந்த பங்களிப்பைத் தருகிறது என்பது பிரதமர் மோடிக்கும் தெரியும் என நம்புகிறேன்.

சிலவற்றை எடுத்துரைக்க வேண்டும் என்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு, ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. மொத்த உற்பத்தி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு, ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு, கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு, தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு. ஆனால் ஒன்றிய அரசின் வருவாயில் தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிப்பது 1.21 விழுக்காடு மட்டுமே. எனவே தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பொருளாதாரத்திற்கும் அளிக்கக் கூடிய பங்கிற்கு ஏற்ப ஒன்றிய அரசும் திட்டங்களிலும் நிதியிலும் தங்களது பங்களிப்பை உயர்த்த வேண்டும். அதுதான் கூட்டுறவு கூட்டாட்சியாக அமையும்.

ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்கும் மகத்தானது. எடுத்துக்காட்டாக நெடுஞ்சாலைத் துறையிலே நம் நாட்டிலேயே அதிக மூலதன செலவை மேற்கொள்ளக் கூடிய மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைக்காகத் தமிழ்நாட்டில் தற்போது 44,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டு வரும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ள தொகை 18,218 கோடியே 91 லட்ச ரூபாய். எனவே சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உங்களோடு சேர்ந்து நாங்கள் முனைப்பாக இருக்கிறோம். மேலும் அதிக அளவிலான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும்.

இத்தகைய இணை திட்டங்களை ஒன்றிய அரசு தொடங்கும் போது தனது நிதிப் பங்கை அதிகம் அளித்தாலும், காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து மாநில அரசு செலவிட வேண்டிய நிதி பங்கை உயர்த்தும் நிலையையே பார்க்கிறோம். இரண்டாவது ஒன்றிய, மாநில அரசின் பங்களிப்போடு பயனாளிகளின் பங்கையும் முன்னிறுத்திப் பல திட்டங்கள் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படுகிறது. அந்தத் தொகையைப் பயனாளிகள் திரும்பச் செலுத்த முடியாதபோது, மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கிற மாநில அரசுதான் பயனாளிகளின் பங்கையும் சேர்ந்து செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மாநில அரசினுடைய நிதிச்சுமை அதிகரிக்கிறது. எனவே ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து செயல்படுத்துகிற திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடக் கூடிய ஒன்றிய அரசின் பங்கானது சித்தம் முடியும் வரை தொடர வேண்டும். பயனாளிகள் பங்களிப்போடு செயல்படுத்தப்படக் கூடிய திட்டங்களில் அவர்களது பங்கை செலுத்த முடியாத நிலையில் ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து அதனைச் சமமாக ஏற்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாயத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பர்ய மீன்பிடி பகுதியில் அவர்களின உரிமையை நிலை நாட்ட இது தகுந்த தருணம் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 15.05.2022 வரை தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 14,006 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டுமென விரும்புகிறேன். பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உலக செம்மொழிகளுக்கு இன்றளவும் சீர்மீகு திறத்தோடு விளங்கக் கூடிய தமிழ் மொழியை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. இதுகுறித்து சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் விளக்கிற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும். தமிழக மக்களின் கோரிக்கையை பிரதமர் உணர்வார்கள் என நான் நினைக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in