சந்தடி சாக்குல எடப்பாடி பழனிசாமி சொன்ன காமெடி இதுதான்: முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

சந்தடி சாக்குல எடப்பாடி பழனிசாமி சொன்ன காமெடி இதுதான்: முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மதுரையில் இன்று நடைபெற்ற அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என்று ஒவ்வொரு மண்டலமாக பிரித்துக் கொண்டு அரசு நிகழ்ச்சி, அதற்கு பிறகு திறப்பு விழா நிகழ்ச்சி, அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காலையில் அரசு நிகழ்ச்சி, மாலையிலே இன்னொரு மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி. மொத்தம் இரண்டு நிகழ்ச்சி தான். ஆனால் 24 மணி நேரமும் நிகழ்ச்சி தான். அவை ஏற்பாடு செய்யாத நிகழ்ச்சி. தானாக வந்த நிகழ்ச்சி. எப்படி என்று கேட்டீங்கன்னா, ஒரு நிகழ்ச்சியில் இருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால் 15 நிமிடங்கள்தான் ஆகும். ஆனால் அந்த 15 நிமிட இடத்திற்கு சென்று சேர இரண்டு மணி நேரம் ஆகிறது. என்ன காரணம், போகிற வழி எல்லாம் மக்கள்.

சாலையின் இரு பக்கத்திலும், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் என இரு பக்கமும் சேர்ந்து கொண்டு வரவேற்கின்றனர். வரவேற்கிறது மட்டும் அல்ல, கோரிக்கை மனுக்களையும் தருகிறார்கள். அதுவும் நம்பிக்கையோடு தருகிறார்கள். இவரிடத்தில் இந்த மனுவை கொடுத்தால் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று என் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்து வந்திருக்கிறது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பிலே நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு மாவட்டமாக சென்று மனுக்களை பெற்றேன். ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 100 நாட்களில் 75 சதவீதம் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அது இப்போது தொடர்ந்து நடக்கிறது. இப்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பெயரில் நடக்கிறது. அதுக்கு ஒரு தனி பிரிவு தொடங்கப்பட்டு, அதிகாரி நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் அதை கண்காணிக்க கூடிய வகையிலே அதிகாரிகள் அந்த பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் சாலைகளில் நின்று கொண்டு மனுக்களை வைத்திருந்தால் உடனே நான் காரை நிறுத்த சொல்லுவேன். ஒருத்தர் மனு வைத்திருந்தாலும் சரி காரை நிறுத்தி வாங்கிக் கொண்டுதான் செல்வேன். அதுவும் மாற்றுத்திறனாளி என்றால் அவரை வரவேண்டாம், அங்கே நில்லுங்கள், நானே வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வேன். சாதாரண பேப்பர் வைத்திருப்பார்கள். அதை நான் மனு என்று வாங்கி கொண்டு சென்று விடுவேன். இப்படி எல்லாம் நடந்திருக்கிறது. அந்த மனுவை கொடுக்கிறபோது சிலர் சொல்வார்கள், பல வருடங்களாக கொடுத்து இருக்கிறோம். கடந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால், இப்போது கொடுக்கும் போது நன்றியோடு மனு கொடுக்கிறார்கள். ஏதோ வேலை முடிந்து விட்டது என்று நினைத்து கொள்கிறார்கள்.

எனக்கு மறக்க முடியாத செய்தி என்னவென்றால், சிலர் இப்போது உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி சொல்கிறபோது மக்கள் என் மீதும் அரசின் மீதும் அன்போடும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறேன். இந்த ஆட்சி அந்த அளவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்று நெல்லையில் எனது பயணத்தை நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது வேனில் சென்றபோது சில சுவரொட்டி இருப்பதை பார்த்தேன். அதில் ஒரு சுவரொட்டி என்னை மிகவும் கவர்ந்தது. என்னவென்றால் ஏஎம் பிஎம் பார்க்காத சிஎம். அதாவது, காலை மாலை பார்க்காத சிஎம். பிஎம் பார்க்காத சிஎம். அது ஒரு பக்கம். ஆனால் நான் நினைத்தது என்ன என்றால், ஏஎம் பிஎம் என்பதைவிட நான் எம்எம் சிஎம் ஆக இருக்க வேண்டும் என்பதுதான். எம்எம் சிஎம் என்றால் மினிட் டு மினிட் அதான் எம்எம். ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாக்காமல் மக்களுக்காக பாடுபட வேண்டும் நிலையிலிருந்து எம்எம்சிஎம் ஆக இருந்து டிஎன் நம்பர் ஒன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்று உருவாக வேண்டும் என்ற நிலையிலே பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த சந்தடி சாக்குல ஒரு காமெடி. நீங்கள் எல்லோரும் சோசியல் மீடியாவுல பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். திமுக எம்எல்ஏக்கள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் கிட்ட இருக்கிற எம்எல்ஏ கூட அவரிடம் பேசுவது கிடையாது. உங்க எம்எல்ஏவே உங்க கிட்ட பேசுவது கிடையாது.

எங்க எம்எல்ஏ வந்து உங்ககிட்ட பேசுறாங்க அப்படின்னு புருடா விட்டுட்டு இருக்காரு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி. இன்றைக்கு அதிமுக என்ற கட்சி பிளவுபட்டு இருக்கிறது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக பிளவுபட்டு இருக்கிறது. இப்போது அவர் இருக்கிற பதவியே டெம்பர்வரி பதவி. டெம்பர்வரி பதவி வச்சிக்கிட்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க இவருக்கு தகுதி இருக்கா. நான் கேட்கிறேன், நானும் இந்த நாட்டில் உயிரோடு இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காகத்தான் காமெடி கதைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. என்னை பொறுத்தவரை குறிக்கோள் வைத்திருக்கிறேன். நல்லது செய்வதற்கு கூட எனக்கு இப்போது நேரம் இல்லை. ஆக இப்படி கெட்டதை, பொய்யை திட்டமிட்டு செய்யக்கூடிய பொய் பிரச்சாரத்தை பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. அதற்கெல்லாம் நேரமே இல்லை. கவலைப்பட வேண்டிய அவசியமும் கிடையாது. மக்கள் நமக்கு நன்மை செய்ய வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்த நன்மையை மட்டும் செய்வோம் மக்களுக்காக வாழ்வோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in