டெல்லியில் சோனியா, முக்கிய தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தேனீர் விருந்து

டெல்லியில் சோனியா, முக்கிய தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தேனீர் விருந்து

டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சோனியா காந்தி உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தேனீர் விருந்து அளித்தார்.

டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார். பின்னர் கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும், கலைஞர் கருணாநிதியின் சிலையை கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவும் திறந்து வைத்தனர்.

பின்னர் முரசொலி மாறன் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, சோனியா காந்தி குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது, ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய ‘கருணாநிதி ஏ லைஃப்’ என்ற நூலை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக் கொண்டார். பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதிய ‘ஏ திராவிடன் ஜார்னி’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதையடுத்து, கட்டிடத்தின் 3-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் பெயரிலான நூலகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெற்றது. அண்ணா- கலைஞர் அறிவாலய திறப்பு விழா நிகழ்ச்சியால், இந்த கட்டிடம் அமைந்துள்ள தீன்தயாள் மார்க் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in