‘இந்தி திணிப்பு நாட்டினை பிளவு படுத்திவிடும்’: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

‘இந்தி திணிப்பு நாட்டினை பிளவு படுத்திவிடும்’: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகம் உள்ளிட்ட வேற்று மொழிகளைப் பேசும் மாநிலங்களில் இந்தி திணிப்பதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியைத் திணிப்பதற்கான மத்திய அரசின் சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. அவை நாட்டினை பிளவு படுத்தும் தன்மை கொண்டவை. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் ஏற்புடையது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.

‘ஒரே நாடு’ என்ற பெயரில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும். அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும் அனைத்து மொழிகளைப் பேசுவோருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் மத்திய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

பல்வேறு வழிகளில் இந்தியை திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமை வாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in