`என்னுடைய அரசியல் வளர்ச்சியில் மதுரையின் பங்கு முக்கியமானது': உதயநிதி

`என்னுடைய அரசியல் வளர்ச்சியில் மதுரையின் பங்கு முக்கியமானது': உதயநிதி
சிலை திறப்பு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின். அருகில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ், சிவ.வீ.மெய்யநாதன்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை ஆனையூரில் இன்று மாலை மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முத்தரையர் சமூகத்தினர் திரளானோர் கலந்துகொண்ட இந்த விழாவில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிகையில், ``தமிழக வரலாற்றில் புகழ்மிக்க பேரரசர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். இவர் சந்தித்த 12 போர்களிலும் ஒன்றில் கூடத் தோற்காமல் தொடர்ந்து வெற்றிகண்டவர். அவரது சிலையை முதல்வர் சார்பில் உங்கள் பிரதிநிதியாக திறந்துவைப்பதில் பெருமையடைகிறேன். என்னுடைய அரசியல் வளர்ச்சியில் மதுரையின் பங்கு முக்கியமானது. இளைஞரணி செயலாளர் பொறுப்பேற்பதற்கு முன்பே மதுரையில் அமைச்சர் மூர்த்தி 2017-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் பொற்கிழி வழங்கும் விழாவை நடத்திக்காட்டினார். அதில் கலந்துகொண்ட பின்னரே நான் இளைஞரணி செயலாளராக 2019-ல் பொறுப்பேற்றேன்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தமிழக மக்கள் எம்பி தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என்று தொடர்ந்து திமுகவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதைத் தற்போது நிறைவேற்றியுள்ளோம். இந்தச் சிலையை பல ஆண்டுக்கு முன்பே இங்கு திறந்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக சதித்திட்டம் தீட்டி திறக்கவிடாமல் செய்துவிட்டது. தற்போது மூர்த்தியின் தீவிர முயற்சியால் சிலை திறக்கப்பட்டு முத்தரையர் சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மூர்த்தியிடம் எந்தபொறுப்பை வழங்கினாலும் சிறப்பாக செய்துமுடிப்பார் என்பதற்கு அவரது துறை இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய் ஈட்டியிருப்பதும், இந்தச் சிலை திறப்பு விழாவும் ஒரு சான்று. இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதற்கு முத்தரையர் சமுதாயத்தினர் தொடர்ந்து ஆதரவுகொடுத்து துணை நிற்கின்றனர். இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்'' என்றார்.

Related Stories

No stories found.