திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் அதிரடி ஆய்வு: அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் அதிரடி ஆய்வு: அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி

டெல்டா மாவட்ட கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்வதறியாது பதற்றம் அடைந்தனர்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மே 24-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளில் 80 கோடி மதிப்பீட்டில் 4964 கி.மீ. தொலைவிலான தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை செல்கிறதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்பு உறையூரில் உள்ள திமுக பிரமுகர் செல்வேந்திரனின் இல்லத்திற்கு சென்று அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

அங்கிருந்து சுற்றுலா மாளிகை செல்லும் வழியில் திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் முதல்வரின் கார் திடீரென உள்ளே நுழைந்தது. பின்பு அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார் ஸ்டாலின். மேலும் அவர்களிடம் மனுக்களை பெற்று, மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். திடீரென நடத்தப்பட்ட முதல்வரின் ஆய்வால் நகராட்சி ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.

திடீர் ஆய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in