‘இதை பாஜக கூட ஏற்காது’ - சர்ச்சை கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்

‘இதை பாஜக கூட ஏற்காது’ - சர்ச்சை கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்

பாஜகவுடன் திமுக சமரசமாகப் போய்விட்டதாகச் சொல்வதை பாஜகவே ஏற்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி குறித்து பொதுமக்களின் கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று பதில் அளித்துப் பேசினார். பொதுமக்களின் கேள்விகளுக்கான பதிலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலியாகப் பதிவு செய்துள்ளார்.

2024 தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிறீர்கள் அதற்காகக் கழகத்தின் பங்களிப்பு என்ன என்ற கேள்விக்கு,  தமிழகம், புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது முதல் இலக்கு. இந்தியா முழுவதும் சமூக நீதி, கூட்டாட்சி கருத்தியல், நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது  இரண்டாவது இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் களமிறங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா என்ற கேள்விக்கு, முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதத்தால் நடக்காது என நினைக்காதீர்கள். நீட் தேர்வில் மிகப்பெரிய சமூக அநீதியை பாஜக அரசு செய்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதற்குப் பாடம் புகட்டுவதாக அமையும் எனவும், பாஜகவோடு திமுக சமரசமாகப் போய்விட்டதாகச் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, ‘இப்படிச் சொல்வதை பாஜகவே ஏற்காது’ எனவும் பதில் அளித்துள்ளார்.

சாலைகளை எப்போது தான் சரி செய்வீர்கள் என்ற கேள்விக்கு, கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையை மீளூருவாக்கம் செய்யும் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் சிரமங்கள் ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார்.

ஒன்றரை ஆண்டுக்கால திமுக ஆட்சியின் சாதனை மற்றும் சவால்கள் என்னென்ன என்ற கேள்விக்கு, மக்கள் முகங்களில் காணக்கூடிய புன்னகைதான் என் சாதனை. நிதி நெருக்கடிதான் மிகப்பெரிய சவால் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in