`ஆளுநர் ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்'- தமிமுன் அன்சாரி

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது ஆளுநர் நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்குரியது என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி  கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  'ஒரு மாநில அரசின் அச்சடிக்கப்பட்ட உரையை உள்ளது உள்ளப்படியே வாசிப்பதுதான் ஆளுநர் உரையின் மரபாகும். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய ஆளுனர் உரையில் அது மீறப்பட்டிருக்கிறது. அவர், திராவிட மாடல் என்ற வார்த்தையை மட்டுமின்றி சமூக நீதி, சுயமரியாதை, மத நல்லிணக்கம், சமத்துவம்  போன்ற வார்த்தைகளையும் பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களையும் வாசிக்காமல் தவிர்த்திருக்கிறார்.

அச்சடிக்கப்பட்ட வாசகங்களை தவிர்த்திருப்பதோடு, அச்சடிக்கப்படாத வாசகங்களை அவர் பயன்படுத்தியிருப்பதும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இது ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும். மேலும்  தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகும்.

ஏற்கெனவே தமிழ்நாடு என்ற வார்த்தையை எதிர்த்து, தமிழக மக்களுடன் ஒரு கொள்கை யுத்தத்தை அவர் தொடங்கி வைத்திருக்கிறார்.  இன்று சட்டப் பேரவையில் அவரது நடவடிக்கைகள் அதை உறுதி செய்திருக்கிறது. இது தமிழகத்தில் கடும்  அதிர்வலைகளை மக்களிடம் உருவாக்கியிருக்கிறது.

தமிழக முதல்வர் சட்டப்பேரவையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதோடு மட்டுமின்றி சட்ட மன்றத்திலேயே ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானத்தையும் நிறைவேற்றியிருப்பதும் பாராட்டுக்குரியது. ஒன்றிய அரசு, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in