மோடியுடன் பிரச்சாரம் செய்யமாட்டேன்! கூட்டணிக்கட்சி முதல்வர் திடீர் அறிவிப்பு; பாஜக அதிர்ச்சி!

ஜோரம்  தங்கா
ஜோரம் தங்கா

மிசோரம் மாநிலத்தில் பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து  மேடை ஏற மாட்டேன்  என அம்மாநில முதல்வர் ஜோரம் தங்கா தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியலில் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மிசோ தேசிய முன்னணி இயங்கி வருகிறது. அந்த முன்னணியைச் சேர்ந்த ஜோரம் தங்கா முதல்வராக  பதவி வகித்து வருகிறார். 

மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளைக் கொண்ட பேரவைக்கு நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.

இந்த சூழலில் வரும் 30-ம் தேதி அன்று மிசோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அந்த கூட்டணியில் உள்ள முதல்வர் ஜோரம் தங்கா, பிரதமர் மோடியுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

'மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜகவுடன் பரிவு காட்டுவது  எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக பரப்புரை மேற்கொள்வதும், நான் தனியாக பரப்புரை மேற்கொள்வதும் தான் சரியாக இருக்கும்' என மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் பலவும் பிரிந்து போயுள்ள நிலையில் தற்போது கூட்டணியில்  நீடிக்கும் ஒரு கட்சியின் முதல்வர் பிரதமருடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள போவதில்லை என்று அறிவித்திருப்பது பாஜகவுக்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகரித்திருப்பதையே  காட்டுவதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in