
``தமிழ்நாட்டில் மருந்து பற்றாக்குறை என கூறும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாக விவாதத்திற்கு வர தயாரா?'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, சோழவரம் ஆகிய இடங்களில் 2.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட எல்லாபுரம் வட்டார பொது சுகாதார ஆய்வகம், துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார், எம்.எல்.ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராசன், துரை.சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”எடப்பாடி பழனிசாமி மருந்து பற்றாக்குறை என அறிக்கை கொடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் 313 வகையிலான அத்தியாவசிய மருந்துகள், 234 வகையிலான மருத்துவ அறுவை மற்றும் தையல் உபகரணங்கள், 326 சிறப்பு மருந்துகள், 7 ரத்தம் உறைதல் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட பிறகு 240.99 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தற்போது கிடங்குகளில் கையிருப்பில் உள்ளது” என்றார்.
மேலும், ”32 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் உள்ள நிலையில் எஞ்சிய 6 மாவட்டங்களிலும் தலா 5 கோடி என ரூ. 30 கோடி மதிப்பீட்டில் மருந்து கிடங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மருந்துகள் எங்கு பற்றாக்குறை என தம்முடன் நேரில் வந்து சுட்டிக்காட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தயாரா? மருத்துவத்துறைக்கு மத்திய அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் 549 விருதுகள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது ஒரே ஆண்டில் மட்டும் 310 விருதுகள் பெற்றுள்ளது.
இது தற்போதைய மருத்துவத்துறையின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம். கடந்த 6 ஆண்டுகளில் மகப்பேறு பிரிவிற்கு 79 விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டில் மட்டுமே 45 விருதுகள் கிடைத்துள்ளன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள 30க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்பு வந்தவுடன் பணி நியமனம் செய்யப்படும். ஏற்கெனவே இபிஎஸ் கூறிய குற்றச்சாட்டை பொய் என நிரூபித்த நிலையில் மீண்டும் அறிக்கை வெளியிட்டு அதன் பின் ஒளிந்து கொள்வது எதிர்க்கட்சி தலைவருக்கு பொருத்தமானது அல்ல.
சந்தேகத்திற்கு மிக நெருக்கமானவர் எடப்பாடி பழனிசாமி. மருத்துவத்துறை தொடர்பாக மேலும் சந்தேகங்கள் இருந்தால் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர் அனுப்பும் நபருடனோ விவாதம் நடத்த தயார்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!