ஆளுநர் விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்!

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்திருந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விழாவில் கலந்துகொள்ளாமல் ஆளுநரின் விழாவை புறக்கணித்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ரவி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டனர். மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை ஆளுநர் ரவி வழங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று விழா அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர்கள் இருவரிடமும் முறைப்படி அனுமதி வாங்கிய பிறகே அழைப்பிதழை பல்கலைக்கழக நிர்வாகம் தயாரித்திருந்தது.

குறிப்பிட்டபடி இன்று மாலை 4 மணி அளவில் விழா தொடங்கியது. அமைச்சர்கள் இருவரும் கட்டாயம் வந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு அமைச்சர்களும் வரவில்லை. அவர்கள் மட்டுமல்லாது அண்ணாமலைநகர் பேரூராட்சித் தலைவர், சிதம்பரம் நகர மன்றத்தலைவர் உள்ளிட்டவர்கள்கூட இந்த விழாவில் பங்கேற்கவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக விழாவை எப்படி திமுகவினர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய கோரிக்கையான நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆளுநரின் நிகழ்ச்சிகளை திமுகவினர் புறக்கணிப்பது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஆளுநர் அளித்த தேனீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குரல் எழுப்பியிருந்தார். திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி தொடர்ந்து ஆளுநரை வசைபாடி வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று தகவல்கள் இன்று காலை ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆளுநரிடம் உறவு சுமுகமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். ஆனாலும் இன்றைய தினமே மாலையில் நடைபெற்ற விழாவில் திமுக அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளாமல் இருப்பது ஆளுநர் மீதான திமுகவின் கோபம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

திமுக தரப்பில், சட்டப்பேரவை நடந்து கொண்டிருப்பதால் அமைச்சர்கள் கலந்து கொள்ள இயலவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மதியம் சட்டப்பேரவை முடிந்த பிறகு கிளம்பி இருந்தால்கூட மாலை இந்த விழாவிற்கு வந்து இருக்கலாமே? என்று கேட்கிறார்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள். இப்படி தொடர்ந்து ஆளுநர் - திமுக மோதல் தொடர்ந்து கொண்டே போவதால் தமிழக நலனுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமோ என்று கவலைப்படுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in