'நீ யாரு, எந்த ஊரு? கன்னியாகுமரிக்கு தூக்கியடிங்க': ஆய்வின்போது மருத்துவர்களை மிரளவைத்த துரைமுருகன்!

'நீ யாரு, எந்த ஊரு? கன்னியாகுமரிக்கு தூக்கியடிங்க': ஆய்வின்போது மருத்துவர்களை மிரளவைத்த துரைமுருகன்!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற அமைச்சர்களின் ஆய்வின் போது, மெத்தனமாக இருந்ததாக இரண்டு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொன்னை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பொன்னை கிராம மக்கள், மருத்துவமனை முறையாகச் செயல்படவில்லை எனவும் பாம்புக் கடிக்கு மருந்து இல்லை எனவும் மருத்துவர்கள் இல்லாமல் கடமைக்காகச் சுகாதார நிலையம் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர். அப்போது அமைச்சர்கள் அங்கிருந்த மருத்துவர்களிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பி அதிர்வைக் கிளப்பினர்.

அமைச்சர் துரைமுருகன் அங்கிருந்த சுகாதார பணிகள் இயக்குநர் பானுமதியை பார்த்து, ‘ஆமாம், நீங்க யாரு? உங்கள நான் பார்த்ததே இல்லையே. இப்போதுதான் பார்க்கிறேன்’ என்றார். ‘நான் சுகாதாரப் பணிகள் இயக்குநர் பானுமதி’ என அவர் பதில் அளித்தார். ‘உங்களையெல்லாம் நான் பார்த்ததே இல்லையே, இவ்வளவு நாளா நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க?’ எனக் கேள்வி எழுப்பினார். அப்போது, பணியில் கவனம் செலுத்தாத வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா மற்றும் அங்கிருந்த மருத்துவர்களை துரை முருகன் கடும் சொற்களால் வாட்டி எடுத்தார். பின்பு ‘நீ யாரு? நீங்களெல்லாம் எந்த ஊரு? முதல்ல இவங்கள சஸ்பெண்ட் பண்ணுங்க; அப்படி இல்லன்னா  கன்னியாகுமரிக்கு டிரான்ஸ்பர்ல தூக்கி அடிங்க’ என மா. சுப்ரமணியியனிடம் கோபம் காட்டினார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரை செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசு மருத்துவமனையில் சரியான முறையில்  பணியில் கவனம் செலுத்தாத வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் ஆகிய இரண்டு பேரை  உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்னை  அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தவும் புதிய கட்டிடங்களைக் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மேல்பாடி, திருவலம், ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களையும்  அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in