சித்திரைத் தேர்த்திருவிழாவில் பங்கேற்காத உள்ளூர் அமைச்சர்கள், மேயர்: ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி

மதுரையில் நடைபெற்ற தேர்த்திருவிழா.
மதுரையில் நடைபெற்ற தேர்த்திருவிழா.சித்திரைத் தேர்த்திருவிழாவில் பங்கேற்காத உள்ளூர் அமைச்சர்கள், மேயர்: ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி

மதுரையில் இன்று நடந்த பிரசித்திப்பெற்ற மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்தேர்திருவிழாவில் உள்ளூர் அமைச்சர்கள், மேயர் உள்ளிட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று நடந்தது. இந்த திருவிழாவில் வழக்கமாக ஆளும்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள்.

பக்தர்கள் வெள்ளத்தில் தேர்.
பக்தர்கள் வெள்ளத்தில் தேர்.சித்திரைத் தேர்த்திருவிழாவில் பங்கேற்காத உள்ளூர் அமைச்சர்கள், மேயர்: ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி

ஆனால், மதுரையில் நடந்த இந்த பிரசித்தி பெற்ற சித்திரைத் தேர்த்திருவிழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகர திமுக மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ கோ.தளபதி, மேயர் இந்திராணி மற்றும் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.

சாதாரணமாக நடக்கும் உள்ளூர் கோயில் திருவிழாக்கள், அரசு நிகழ்ச்சிகளில் தங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெறுவதற்கு உள்ளூர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மேயர், கவுன்சிலர்கள் போட்டிப்போட்டு பங்கேற்பார்கள்.

ஆனால், இன்று நடந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக உள்ளூர் அமைச்சர்கள், மேயர் பங்கேற்காமல் இருந்தது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நேற்று நடந்த மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி உள்ளிட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த மிக சிலரே பங்கேற்றனர்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டவர்கள் மீனாட்சியம்மன் கோயில் கொடியேற்றுவிழாவில் பங்கேற்றனர். சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை மாநகராட்சிதான் முன்னின்று செய்து வருகிறது. அதற்கான ஏற்பாடுகளையும், கள ஆய்வுகளையும் மேயர் இந்திராணி செய்து வந்தார். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில் நேற்று தேர்த்திருவிழாவில் பங்கேற்காதது, உள்ளூர் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், விமானத்தில் மதுரைக்கு தாமதமாக வந்ததால் அவரால் தேர்த்திருவிழாவில் பங்கேற்க முடியவில்லை. மேயர் இந்திராணிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் பங்கேற்க முடியவில்லை. பி.மூர்த்தி, மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் நடக்கும் விழாக்களில் பொதுவாக ஆர்வம் காட்டுவதில்லை. அத்துடன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கும் விழாவில் பங்கேற்க ஆர்வம்காட்டமாட்டார். அதனால், அவர் வராமல் இருந்திருக்கலாம்.

மற்றபடி அவர்கள் பங்கேற்காமல் இருந்ததிற்கு வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. திருக்கல்யாணம் நடந்த அன்று சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடந்ததால் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்க முடியவில்லை ’’ என்றனர். ஆனாலும், மதுரையில் நடக்கும் உலகப்புகழ் பெற்ற விழாவில் உள்ளூர் அமைச்சர்கள், மேயர் பங்கேற்காதது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in