‘அண்ணன் நேரு துரோணாச்சாரியார்’ - அன்புமழைப் பொழிந்த அன்பில் மகேஷ்!

‘அண்ணன் நேரு துரோணாச்சாரியார்’ - அன்புமழைப் பொழிந்த அன்பில் மகேஷ்!

திருச்சியைச் சேர்ந்த  அமைச்சர்கள்  கே.என்.நேருவும்,  அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தங்களுக்கிடையே இருந்த அதிகார போட்டியை மறந்து, முதல்வர்  ஸ்டாலின் வருகைக்காக கூட்டியிருந்த ஆலோசனைக் கூட்டத்தில்  பரஸ்பரம் அன்பைப் பொழிந்திருக்கிறார்கள். 

திருச்சியில் பல்வேறு  திட்டங்களை தொடங்கிவைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4 ம் தேதி திருச்சி வருகிறார். அவருக்கு வரவேற்பளிப்பது  உள்ளிட்ட ஏற்பாடுகள்  தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அன்பில் மகேஷை அழைத்திருக்கிறார். அதன் காரணமாக துறைரீதியாக இருந்த அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த  கூட்டத்தில் கலந்து கொண்டார். இதை தனது பேச்சின்போது  குறிப்பிட்ட அன்பில் மகேஷ் அடுத்து பேசியதுதான்  உடன்பிறப்புகள் அனைவரையும் உற்சாகம் கொள்ள வைத்தது. 

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எத்தனை இடங்கள் நாம் வெற்றி பெறுவோம் , அதற்கு எப்படி எல்லாம் நாம் பணியாற்ற வேண்டும் என்பதை அண்ணன் கூறினார். அவர்  சொன்னது அப்படியே நடந்தது. ஏன் என்றால் சொன்னவர் ஏதோ ஆறுதலுக்காக அப்படி   சொல்பவர் அல்ல, அவருடைய அந்த அனுபவம் அவரை  சொல்ல வைத்திருக்கின்றது. 

திருச்சி மாவட்டம் என்ன நினைக்கிறதோ அதுதான் தமிழ்நாடும் நினைக்கும் என்று  அமைச்சர் அண்ணன் சொன்னார். அது உண்மை. எங்களைப் பொறுத்த வரைக்கும், எங்களது திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தை பொறுத்தவரைக்கும் நாங்கள் அவரை  ஒரு துரோணாச்சாரியாகத்தான் பார்க்கிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து  செயல்பட வேண்டும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற  கட்சி நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்த உழைக்க வேண்டும் ’’என அன்பில் மகேஷ் பேசினார்.

எதிரும் புதிருமாக இருந்த இரண்டு அமைச்சர்களும் தங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமையை மறந்து கழகத் தலைவரை வரவேற்கும் ஆயத்த கூட்டத்தில் அன்பைப் பொழிந்திருப்பது உடன்பிறப்புகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது, உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in