குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஈபிஎஸ்; அணிதிரண்டு முகலிவாக்கத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர்கள்!

குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஈபிஎஸ்; அணிதிரண்டு முகலிவாக்கத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர்கள்!

எடப்பாடியின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சென்னை, முகலிவாக்கத்தில் வெள்ள நீர் அகற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான முகலிவாக்கம், கொளப்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாகத் தேங்கிவரும் நீரை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் அகற்ற முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குன்றத்தூர் பகுதியில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி, நடவடிக்கை எடுக்காத அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் தா.மோ. அன்பரசன், கடந்த பத்து வருடங்களாக ஒன்றும் செய்யாமல் தற்போதுள்ள அரசின் மீது எடப்பாடி பழனிசாமி பெரிய யோக்கியர் போலக் குற்றச்சாட்டு வைக்கிறார். நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம். வசதியான மக்கள் அதிகம் இருப்பதால், பெரும்பாலான மக்கள் நலத்திட்ட உதவிகளை ஏற்பதில்லை எனச் சொன்னார்.

இந்நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்த முகலிவாக்கம் பகுதியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு, மு.நாசர், மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர். முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர்ப் பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும் போரூர் ஏரியிலிருந்து மணப்பாக்கம் கால்வாய் வழியாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்குவது குறையவில்லை. இதைத் தொடர்ந்து தனியார் நிலங்களின் வழியாக மழைநீரை நீரைக் கொண்டு செல்ல அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு“ 120 கோடியில் புதிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதிப் பணி முடிவடைந்துள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்துவிட்டால், அடுத்த வருடம் இப்பகுதிகளில் தண்ணீர் வராது. அடுத்த வருடம் நிரந்தரத் தீர்வு ஏற்படும். பாதாளச் சாக்கடை திட்டம் வேலை நடந்து வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க அவர்களோடு போராடி வருகிறோம். நிறைய ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அதையும் அகற்றுவோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in