சுங்கச்சாவடியை எடுக்க தயாராகிறது தமிழக அரசு

60 கிமீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடியை கணக்கெடுக்க அமைச்சர் எ.வ. வேலு உத்தரவு
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுsource

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஆய்வு பணிகளுக்காக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வந்திருந்தார். பல்வேறு ஆய்வுப்பணிகளுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

குமரி கடற்கரையில் ஆய்வு செய்யும் எ.வ.வேலு
குமரி கடற்கரையில் ஆய்வு செய்யும் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், ``குமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 233 கிலோ மீட்டர், எம்.டி.ஆர் சாலை 266 கிலோ மீட்டர் உள்பட 1240 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் விரிவுபடுத்துவது, உறுதிபடுத்துவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இரண்டுமாத காலத்திற்கு முன்னாள் 35 ஆண்டுகளுக்கு முன்பு பெய்தது போல் கனமழை பெய்தது. இதனால் தமிழகத்திலேயே அதிகளவு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட மாவட்டம் கன்னியாகுமரி தான். ஏறத்தாழ 17 இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. உடனே முதல்வரும் நேரில் வந்து பார்வையிட்டார். துறை முடுக்கிவிடப்பட்டு பத்து நாளிலேயே சாலைகள் செப்பனிடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

களியங்காடு முதல் கன்னியாகுமரிவரை மற்றும் பார்வதிபுரம் முதல் காவல்கிணறு வரையுள்ள 78 கிலோ மீட்டர் சாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளது. அதோடு மட்டுமல்லாது ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 95 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் பல இடங்களிலும் நடந்துவருகிறது. அதில் சாலை துண்டிக்கப்பட்டதற்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லியே முதல்வர் என்னை குமரிக்கு அனுப்பினார்.

மோதிரமலை- குற்றியாறு சாலையில் உள்ள ஒரு உயர்மட்ட பாலம், காளிகேசம் மற்றும் கீழ்பாறைப்பகுதியில் இரு உயர்மட்ட பாலங்கள் கட்ட 11 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பணி விரைவில் தொடங்கும். கூடங்குளம் செல்லும் சாலையில் உள்ள குறுகலான பாலத்தை விரிவுபடுத்திக் கட்ட 2 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்பதியான்கடவு வளைவுப்பகுதியை விரிவுபடுத்த ஒருகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் முந்தைய அதிமுக ஆட்சியோடு ஒப்பிட்டால் திமுக ஆட்சியில் 15 சதவிகிதம் குறைந்திருப்பதாக ராஜ்யசபாவிலேயே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அந்த அடிப்படையில் சாலை பாதுகாப்பிற்கு குமரிக்கு 5.30 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேகத்தடை, வண்ண விளக்கு வசதியெல்லாம் இதன் மூலம் கிடைக்கும். தமிழகம் முழுவதும் உள்ள சாலைப் பாதுகாப்புப் பணிக்கு தமிழக அரசு 200 கோடியும், மத்திய அரசு 100 கோடியும் ஒதுக்கியுள்ளது.

காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 48.64 கிலோ மீட்டர் நீளத்திற்கு 49 கோடி ரூபாய் பராமரிப்பிற்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. 3.66 கோடி ரூபாய் மதிப்பில் விபத்து அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட உள்ளோம். குமரியில் கடலரிப்பினால் கெடும் சாலைகளை புது தொழில்நுட்பத்தில் எதிர்கொள்ளும் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளோம்.

சுங்கச்சாவடிகளைப் பொறுத்தவரை கேரளத்தைவிட தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது. 47 சுங்கசாவடி தமிழகத்தில் இருப்பது மிக அதிகம். அதனை குறைக்க வேண்டும் என நான் தொடர்ந்து பேசிவருகிறேன். ஏற்கெனவே நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பத்துகிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது என்னும் விதி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி 5 சுங்கச்சாவடிகளை முதல்கட்டமாக எடுக்கலாம். சென்னையை நோக்கிச் செல்லும்போது பரணூர் சுங்கச்சாவடி வழியாகத் தான் சென்னைக்குள் செல்ல முடியும். அது செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதியிலேயே இருக்கிறது. இதுபோன்று கண்டறிந்து 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என கடிதம் கொடுத்தேன். மத்தியில் இருந்து உரிய பதில் இல்லாததால் நினைவூட்டல் கடிதம் கொடுத்துள்ளேன். நிதின் கட்கரியும் 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இதை மையமாக வைத்து, தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்குள் என்ன, என்ன இடங்களில் அடுத்தடுத்து சுங்கச்சாவடி இருக்கிறது என அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன் விவரம் வந்ததும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதுவோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in