
’’புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு இந்தி நடிகையை கூட்டிட்டுப் போறாங்க ஆனா நாட்டின் முதல்குடிமகள், கணவர் இல்லை என்பதாலும், அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரை புறக்கணித்துள்ளனர். இதுதான் சனாதனம்’’ என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திமுகவின் பவளவிழாவை முன்னிட்டு மதுரையில், திமுகவின் மூத்த முன்னோடிகள் 1,600 பேருக்கு தலா ரூ.10,000 பொற்கிழி மற்றும் பாக முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பொற்கிழிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி, ‘’சனாதனம் குறித்து அண்ணா பேசிய வார்த்தைகளை பேச அதிமுக தலைவர்களுக்கு தைரியம் இருக்கிறதா..? அண்ணா பேசிய அத்தனை கருத்துக்களையும், மாநில சுயாட்சியை திமுக தான் பேசி வருகிறது. ’’சனாதனம் என்னும் சேற்றில் இருந்து நம் மக்கள் இன்னும் வெளியேறாதது வருத்தம் அளிக்கிறது; அதனை சந்தனம் என ஒரு சிலர் பூசிக் கொள்கிறார்கள்’’ என அண்ணா பேசினார். இந்த கருத்தை செல்லூர் ராஜு போன்றவர்கள் பேசுவார்களா?
சனாதனம் என்றால் என்ன என்று தற்போது என்னை கேட்கிறார்கள். இப்போது சொல்கிறேன் புதிய நாடாளுமன்றம் திறக்கும் போது நாட்டின் முதல் குடிமகள் ஜனாதிபதியை கூப்பிடவில்லை. ஆனால் நடிகையை எல்லாம் கூட்டிட்டு போனாங்க. ஜனாதிபதியை ஏன் கூப்பிடவில்லை என்றால் அவர் கணவனை இழந்தவர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கூப்பிடவில்லை. இதைத்தான் சனாதனம் என்கிறேன். இதைத்தான் ஒழிக்க வேண்டும் என்கிறேன்’’ என்றார்.