பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் முழக்கம்... உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது ஆட்டம் இழந்து வெளியேறிய பாகிஸ்தான் வீரரை நோக்கி ஜெய்ஸ்ரீராம் என்று ரசிகர்கள் முழக்கமிட்டதிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத்தில் நேற்று குவிந்திருந்தனர்.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் நேற்று அரசியலும் மதமும் கலந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. போட்டி தொடங்கும் போது ஜெய் ஸ்ரீராம் என்ற பாடல்களும் அங்கு ஒலிக்கப்பட்டன. அத்துடன், பாகிஸ்தான் அணி வீரர் ரிஸ்வான் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பும்போது அவரை நோக்கி இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என தொடர்ந்து முழக்கமிட்டனர்.

பாபர், ரோகித்
பாபர், ரோகித்

இந்த செயல் பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அப்படி செய்தவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி, பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பது மோசமான செயல் என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

ஒரு இஸ்லாமிய நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என்று மதவாதமாக முழக்கமிடுவது என்ன மாதிரியான சகிப்புத்தன்மையை நாம் பெற்றிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இந்த சம்பவம் குறித்துதமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். "இந்தியா விருந்தோம்பலுக்கு பெயர் போன நாடு. ஆனால் நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் வீரருக்கு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. போட்டி என்பது நாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். இப்படி வெறுப்பை ஏற்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in