நடிப்பைத் துறந்து... நாட்டை ஆளத் துணிந்த உதயநிதி! - ஒரு ஃப்ளாஷ் பேக்

உதயநிதி
உதயநிதி

தமிழக அமைச்சரவையின் அங்கமாகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின், “இனிமேல் நடிக்க மாட்டேன்... மாமன்னன் தான் நான் நடிக்கும் கடைசிப் படம்” என்று தமிழக மக்களுக்கு முக்கியமான முதல் செய்தி சொல்லி இருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு ஃபிளாஷ் பேக்கை இங்கே சொன்னால் தான் வரலாறு முக்கியம் என்பது எத்தனை முக்கியம் என்பது தெரியும்.

1971 தேர்தலில் 184 தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்தது. அப்போது திமுகவின் போர்ப்படைத் தளபதியாக இருந்தார் எம்ஜிஆர். தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் என்பதால் திமுக அமைச்சரவையில் புரட்சி நடிகருக்கும் இடமிருக்கும் என தமிழக மக்களும் நினைத்தார்கள். ஆனால், அவரை அமைச்சரவையில் சேர்க்கவில்லை கருணாநிதி. அதற்குக் காரணம், அப்போது எம்ஜிஆர் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். எனினும் அவருக்கு ஹெல்த் மினிஸ்டர் பதவி கொடுக்க வேண்டும் என்று எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்கள் பரிந்து பேசினார்கள்.

பிள்ளையோ பிள்ளை - துவக்க விழாவில்
பிள்ளையோ பிள்ளை - துவக்க விழாவில்

எம்ஜிஆரும் இதை தன்னிடம் கேட்டதாக தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் சேதி சொல்லி இருக்கும் கருணாநிதி, “எம்ஜிஆர் தனக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டார். ஆனால், நீங்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதால் அது சாத்தியமில்லை. சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வந்தால் பரிசீலிக்கலாம்” என்று சொன்னேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி இப்படி எழுதியதை எம்ஜிஆர் மறுக்கவில்லை. அதேசமயம், அமைச்சர் பதவிக்காக நடிப்பை விட்டுவர அவர் சம்மதிக்கவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் எம்ஜிஆருக்குப் போட்டியாக கருணாநிதியின் மகன் மு.க.முத்து ஜிகினா களத்தில் சீவிமுடித்து சிங்காரித்து இறக்கப்பட்டார். எம்ஜிஆருக்கு எல்லாம் தெரியும் ஆனாலும், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் படப்பிடிப்பை தனது கையால் துவக்கி வைத்து வாழ்த்தினார் எம்ஜிஆர். எனினும் இதன் பிறகு எம்ஜிஆரை திமுகவுக்குள் சில சக்திகள் நிம்மதியாக இருக்கவிடவில்லை. அந்த சங்கடங்களை எல்லாம் தான் நடித்த படங்களில் பாட்டாகவும் வசனங்களாகவும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார் எம்ஜிஆர்.

‘நானொரு கை பார்க்கிறேன்... நேரம் வரும் கேட்கிறேன்... பூனை அல்ல புலிதான் என்று போகப் போக காட்டுகிறேன்..!’ - என்று ரிக்‌ஷாக்காரனில் எம்ஜிஆர் முழங்கியதெல்லாம் அந்த வலிகளின் வெளிப்பாடுதான்.

வரலாறு திரும்புகிறது. திமுகவைவிட்டு வெளியேறி அண்ணா திமு கழகம் கண்டார் எம்ஜிஆர். 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மருத்துவம் படித்த டாக்டர் எச்.வி.ஹெண்டேயை அதிமுக வேட்பாளராக நிறுத்தினார் எம்ஜிஆர். இருவருக்கும் கடும் போட்டி. கடைசியில், 699 ஓட்டு வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோற்றுப் போனார் ஹண்டே. அசரவில்லை எம்ஜிஆர். ஆட்சி அமைத்ததும் ஹண்டேயையே சுகாதாரத்துறைக்கு அமைச்சராக்கினார். அதற்காகவே அவரை எம்எல்சி ஆக்கினார் எம்ஜிஆர்.

எச்.வி.ஹண்டே
எச்.வி.ஹண்டே

1971-ல் தன்னை சுகாதாரத்துறைக்கு அமைச்சராக்க மறுத்த கருணாநிதிக்கு பதில் சொல்லும் விதமாகவே, அவரிடம் தோற்றுப் போன ஹண்டேயை அதே சுகாதாரத்துறைக்கு அமைச்சராக்கி இருக்கிறார் எம்ஜிஆர் என்ற பேச்சுகூட அப்போது அதிமுக வட்டாரத்தில் ஏகமாக எதிரொலித்தது.

இப்போது மீண்டும் வரலாறு திரும்புகிறது. உதயநிதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு எம்எல்ஏ ஆனதுமே அவரை அமைச்சராக்கி அழகுபார்க்கத் துடித்தார் அம்மா துர்கா. யாருக்குமே இது இயல்புதானே. ஸ்டாலினுக்கும் அந்த ஆசை இல்லாமல் இருந்திருக்காது. ஆனால், ஊரென்ன சொல்லுமோ என்று அவர் யோசித்தார். சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரை அமைச்சராக்க தனது அப்பா கருணாநிதி மறுத்த கதை ஸ்டாலினுக்கும் தெரியாமல் இருக்காது. அதையெல்லாம் நினைத்துப் பார்த்து மனைவியின் ஆசைக்கு தற்காலிக அணைபோட்டிருக்கலாம் அவர்.

இதோ உதயநிதி அம்மாவின் விருப்பப்படியே அமைச்சராகிவிட்டார். அடுத்த வாரிசு அரியணை நோக்கி நகர்ந்திருப்பது துர்கா உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்திலிருக்கும் அத்தனை பேருக்கும் பெருமைதான். அன்று அமைச்சர் பதவிக்காக நடிப்பைத் துறக்க மறுத்தார் புரட்சி நடிகர் எம்ஜிஆர். ஆனால் இன்று, அமைச்சர் பதவிக்காக நடிப்பைத் துறந்துவிட்டு வந்திருக்கிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி.

இதில் பெரிதாக ஆச்சரியம் ஒன்றுமில்லை. எம்ஜிஆர் திரையால் வளர்ந்து அரசியல் அவதாரம் எடுத்தவர். உதயநிதி அரசியலால் வளர்ந்து திரையில் அரிதாரம் பூசியவர். “ ‘மாமன்னன்’ தான் எனக்குக் கடைசிப் படம் இனி நடிக்கமாட்டேன்” என்று சொல்லி இருக்கிறார் இந்தப் பட்டத்து இளவரசர்.

பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in