
அமைச்சரான பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அப்போது, கோரிக்கை மனுவை பிரதமரிடம் அவர் அளிக்க உள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் இரவு 7 மணியளவில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் இரவில் தங்குகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சந்தித்து பேசுகிறார். மாலை 4 மணி முதல் 5 மணி அளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரான பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ள உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்ந்த கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது.