`அரசின் கொள்கையிலிருந்து ஆளுநர் மாறுபடுவது ஏற்புடையதல்ல'- அமைச்சர் தங்கம் தென்னரசு

`அரசின் கொள்கையிலிருந்து ஆளுநர் மாறுபடுவது ஏற்புடையதல்ல'- அமைச்சர் தங்கம் தென்னரசு

"அரசின் கொள்கையிலிருந்து ஆளுநர் மாறுபடுவது என்பதும் ஏற்புடையதல்ல. தேசிய கீதத்தை இசைப்பதற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது தவறானது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையாற்றியபோது தமிழ்நாடு, திராவிட மாடல், சமூக நீதி, பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை தவிர்த்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளுநர் உரையிலிருந்து வாசிக்காமல் விட்ட ஆளுநர் வாசித்த உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் சட்ட பேரவை வரும் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவை இன்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சட்டப்பேரவைக்கு வெளியே ஆளுநருக்கும், எங்களுடைய சித்தாந்த மரபுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கிறது. இதைக் குறித்து வெளியில் பேசிக் கொள்ளலாம். ஒரு ஆளுநர் சட்டமன்றத்திற்குள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க கூடிய நடவடிக்கையில், இப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆளுநர் உரை வாசிக்கும் போது அதை எதிர்த்து வெளிநடப்பு செய்யும் முறை ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் ஆளுநர் நடந்து கொண்ட விதம்தான் பிரச்சினை. வெளிநடப்பு செய்வதற்குரிய உரிமை எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. ஆளுநர் உரை என்பது ஒரு அரசின் கொள்கை முடிவை சொல்லக்கூடியது ஒன்று. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. அரசின் கொள்கையை சொல்லக்கூடிய ஒரு வரைவு உரையில் ஆளுநர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு மாறுவது என்பதும் அதில் இருக்கக்கூடிய அரசின் கொள்கையிலிருந்து ஆளுநர் மாறுபடுவது என்பதும் ஏற்புடையதல்ல. கடந்த 5-ம் தேதி அனுப்பிய உரைக்கு 7-ம் தேதியை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தனது உரையை ஆளுநர் படிக்கும் முன்பே அது அவருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பும் போது இந்தப் பத்தியில் எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது. இதை நீங்கள் நீக்க வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும் என்று ஏதாவது சொல்லி இருந்தால் பரவாயில்லை. நாங்கள் அனுப்ப உரையில் ஆளுநர் கையெழுத்து போட்டு அனுப்பி இருக்கிறார். மேலும் தேசிய கீதத்தை இசைப்பதற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது தவறானது. தேசியகீதத்தை இசைப்பதற்கு முன்பு அதிமுகவினரும் வெளியேறியது அநாகரிகமான செயல். ஆளுநரின் பேச்சை கண்டிக்க முடியாமல் அடிமை சாசனம் போல் அதிமுக வெளியேறியது அநாகரிகமானது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in