
"ஆட்சியில் இருந்தபோது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லிக்கு காவடி எடுத்தவர் எடப்பாடி பழனிசாமி" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
``தன்னையும், தன் குடும்பத்தையும் பிரதமர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். மு.க.ஸ்டாலினின் மாய்மாலத்திலும், நாடகத்திலும் மயங்க, நமது பிரதமர் மோடி, இந்திராகாந்தி அம்மையார் அல்ல. சட்ட விரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டு உண்மை என்றால், உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழலுக்கு எதிரான, நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் நமது பிரதமர் நரேந்திர மோடி என்பதை திமுகவினர் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 14 கோரிக்கைகளை அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்துள்ளார். முதல்வருக்கு கிடைத்த வரவேற்பால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழக நலனுக்கான கோரிக்கைக்காகவே பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வரும் போதெல்லாம், எந்த சூழ்நிலைக்காக வந்தார், தன்னை காப்பாற்றிக் கொள்ள எத்தனை முறை டெல்லிக்கு வந்தார் என்பதெல்லாம் சுட்டுக்காட்ட விரும்புகிறேன். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லிக்கு காவடி எடுத்தாரே அதேபோல், தற்போதைய முதல்வர் எடுத்தாரா? முதல்வர் கம்பீரமாக அமர்ந்து, தமிழக நலனுக்கான கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள யாருடைய காலிலும் விழ வேண்டிய அவசியம் முதல்வருக்கு இல்லை.
எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொரு முறையும் தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், தமிழக மக்களின் உரிமையை அடகுவைப்பதற்காகவும்தான் டெல்லிக்கு வந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. ஆட்சியில் இருக்கும்போது மவுனியாக இருந்துவிட்டு இன்று அறிக்கை விடுவதோடு, பேட்டி என்ற பெயரில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்றார்.