`சாத்தான் வேதம் ஓதுவதா’- வானதி சீனிவாசன் பேச்சால் சட்டப்பேரவையில் கொந்தளித்த அமைச்சர்!

சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு
சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவானதி சீனிவாசன் பேச்சால் சட்டப்பேரவையில் கொந்தளித்த அமைச்சர்!

``அரசின் திட்டங்களில் தனியாரை அனுமதிப்பது குறித்து பாஜக தமிழக அரசுக்கு வகுப்பெடுப்பது, ‘’சாத்தான் வேதம் ஓதுவது’’ போல இருக்கிறது'' எனத் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் நடத்த ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், ‘’சோறு முக்கியமா? இல்லை மின்சாரம் முக்கியமா? என்றால்  நிச்சயமாகச் சோறுதான் முக்கியம் என நான் கூறுவேன். டெல்டா பகுதி விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியமான பகுதி என்பதை அனைவரும் அறிந்த விசயம்.  அதிமுக அரசு இந்த பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. 

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அரசு  அதிகாரிகளுக்குத்  தெரியாமல் நிலம் எடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? இங்கு பலரும் தனியார்,  அதானி, அம்பானி எனப் பேசுகிறார்கள். ஆனால்  2011  ஜனவரியில் 100 கோடியில் தனியாருடன் இன்றைய முதலமைச்சர், அப்போதைய துணை முதலமைச்சர் ஒப்பந்தம் போட்டார் என்பதை தெரிவித்து கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக பாஜக சார்பில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம் நிச்சயம் மாற்றவும் செய்வோம்‘’ என்றார்.

அவருக்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘’ காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது குறித்த விவரங்கள் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த பேரவையில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் உணர்வுகளைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் அதே உணர்வோடு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.

2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும் போது குறிப்பிட்டார். மனசாட்சியோடு பேச வேண்டும். எதையெல்லாம் விட்டுவிட்டு இந்த சட்டத்தை  இயற்றினார்கள் என்று.  அதேபோலத்தான் உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு நான் சொல்லிக் கொள்வது தனியாருக்கு நீங்கள் கொடுத்துவிட்டீர்கள் என்று அவர் கூறுவது ’சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது போல இருக்கிறது. 

தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்து பாஜக பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஒரு விரலை நீட்டிப் பேசும் போது மற்ற மூன்று விரல்கள் உங்களை நோக்கி உள்ளது என்பதை எண்ணி பாருங்கள். ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.  தமிழகத்தின் நெற்களஞ்சியங்களாக  இருக்க கூடிய இடங்களில் ஒருபோதும் இத்தகைய திட்டங்களைத் தமிழக அரசு அனுமதிக்காது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in