‘இது உங்கள் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது’: அண்ணாமலை பதிவிற்கு தங்கம் தென்னரசு பதிலடி!

‘இது உங்கள் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது’: அண்ணாமலை பதிவிற்கு தங்கம் தென்னரசு பதிலடி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ள தமிழன்னை படத்திற்கு, “கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம் பிள்ளை. இவருக்கு கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து நேற்று இசைக்கப்பட்டது. ரோமில் தமிழ்த்தாய் பாடப்பட்டது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு.
ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு.

புனிதர் பட்ட நிகழ்வில் பங்கேற்ற பாதிரியார்கள் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே!' என்று குறிப்பிட்டு தமிழ்த் தாய் வாழ்த்து புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அமித்ஷாவின் இந்தி பேச்சுக்கு எதிராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இதே தமிழ்த்தாய் படத்தைப் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலையின் ட்விட்டர் பதிவு.
அண்ணாமலையின் ட்விட்டர் பதிவு.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிவிற்குப் போட்டியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னொரு தமிழன்னை புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். கோயிலில் இருக்கும் சிலை போல அதில் தமிழன்னை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில், 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே' என்று குறிப்பிட்டு இருந்தார்.

தங்கம் தென்னரசின்  ட்விட்டர் பதிவு.
தங்கம் தென்னரசின் ட்விட்டர் பதிவு.

அதை விமர்சனம் செய்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்ரில் கருத்தைப் பதிவிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்ட படத்தில் உள்ள ஸ என்று வார்த்தையை அவர் விமர்சனம் செய்துள்ளார். " தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் 'ஸ' வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் 'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்"என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்" என்று தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். அமைச்சரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in