`கடைகளில் குட்காவை விற்காதீங்க'- வியாபாரிகளை அறிவுறுத்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`கடைகளில் குட்காவை விற்காதீங்க'- வியாபாரிகளை அறிவுறுத்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``குட்கா மீது தடை விதிக்க  தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கோவை அரசு  மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா இன்று நடந்தது. இதில் 100 மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அணிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்தியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் பயின்று வருகின்றனர். கோவையில் மருத்துவத்துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி மருத்துவமனை கட்டமைப்பு போல் தமிழகம் முழுவதும் 708 மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் தலா ஒரு டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர், உதவியாளரை நியமித்துள்ளார்.

மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை பிப்.6-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.  கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தினசரி புற நோயாளிகள்  வருகை 400லிருந்து 1,200 ஆகவும், அரசு மருத்துவமனையில் 4 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ரூ.56 லட்சம் உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்ட 500 இடங்களுக்கு உட்பட்ட 679 மருத்துவமனையில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். மருத்துவ மாணவர்களுக்காக பாடநூல்கள் தமிழில் வெளியிடப்பட உள்ளது. காலியாக 787 பணியிடங்களுக்கு பிப்.2-ல் பணி நியமன ஆணையை முதல்வர் வழங்க உள்ளார்.

காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். குட்கா மீதான தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது . போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதில்  தமிழக அரசின் குறிக்கோளாக உள்ளதால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேவைபட்டால் தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in