விளையாட்டா சொன்னேன், சீரியஸா எடுத்துக்கிட்டாங்க: ஓசி பயணம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பொன்முடி விளக்கம்!

விளையாட்டா சொன்னேன், சீரியஸா எடுத்துக்கிட்டாங்க: ஓசி பயணம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பொன்முடி விளக்கம்!

ஓசி பஸ் என நான் விளையாட்டாகச் சொன்னதைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

அரசு பேருந்தில்  பெண்கள் இலவசமாகப் பயணம் செய்வது குறித்து  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  'ஓசியில் தானே வந்தீங்க' என்று  கேட்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து மூதாட்டி ஒருவர், நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் என நடத்துனரிடம் வம்படியாக டிக்கெட் கேட்டு வாங்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அதிமுகவினர் செய்த நாடகம் என்று பின்னர் தெரியவந்தது.

இந்த சம்பவங்களுக்கு மத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, “அரசு எந்த விஷயத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. ஓசி பஸ் என்ற வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியது மிகப் பெரிய தவறு. ஓசி பஸ் எனப் பெண்களைக் கூறும் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் அனைத்து ஆண்களும் பெண் வயிற்றில் ஓசியில் இருந்து  பிறந்தவர்கள் தான்” எனத் தெரிவித்தார். இதுபோல் அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பெண்கள் ஓசியில் பேருந்தில் பயணம் செய்வதாக நான் விளையாட்டாகப் பேசியதை பெரிதாக்குகிறார்கள். இதை இவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in