`எம்எல்ஏவின் கோரிக்கையை கேட்டு நானே ஷாக் ஆகிப்போனேன்'- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`எம்எல்ஏவின் கோரிக்கையை கேட்டு நானே ஷாக் ஆகிப்போனேன்'- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ ஒருவர் விடுத்த கோரிக்கையைக் கேட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ந்து போனார்.

சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மருத்துவமனையை ஆய்வு செய்தார். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனைக்குத் தேவைப்படும் வசதிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி 160 கோடி ரூபாய்க்கு மருத்துவமனைக்கு கட்டிடம் ஒன்றைக் கட்டித்தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். அந்த இரண்டு கோரிக்கைகளை மனதில் பதிய வைப்பதற்குள்ளாக எம்எல்ஏ மூர்த்தியின் மூலமாக ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். அந்த கோரிக்கையை அவர்களே சொல்லாமல் எம்எல்ஏவை வைத்துச் சொல்லச் சொல்லி இருக்கிறார்கள். அவரும் 160 கோடியை 16 வினாடிகளில் ரொம்ப சாதாரணமாகச் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு நானே ஷாக் ஆகிப்போனேன். அந்த எம்எல்ஏ ‘ஐட்ரீம்’ உள்ளவர். அவர் உயர்ந்த கற்பனை உள்ளவர் என்பதால் உயர்ந்த கோரிக்கை விடுத்துள்ளார்” எனக் கிண்டலடித்தார். அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிரித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in