
அமைச்சர் செந்தில்பாலாஜியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் ஐக்கியமானார். இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய அழகு பார்த்தார் முதல்வர் ஸ்டாலின். மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு அவதூறுகளை கிளப்பி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இருவரும் தற்போது வரை அரசியலில் எதிரெதிர் துருவங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரும் ஒரே மேடையில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விழாவில், அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அண்ணாமலை ஒன்றாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.