அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான்: முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆரூடம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி.
முன்னாள் அமைச்சர் தங்கமணி.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திரு.வி.க மர்மநபர்களால் கடத்தப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட ஐடி விங் இணைச்செயலாளர் சிவராஜ் திமுக பிரமுகர் ஒருவரால் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு மீட்கப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகக்கூறி திமுக அரசைக் கண்டித்து கரூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் திமுக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில்," தொண்டர்களைப் பாதுகாக்கும் தலைவர் ஈபிஎஸ் தான். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுக தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். கரூர் தனி மாநிலமாக உள்ளது. ஏனென்றால் இங்குள்ள அதிகாரிகள் தனி அரசாங்கம் நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள உளவுத்துறை செந்தில் பாலாஜியின் ஆட்கள் முதலமைச்சருக்கு கூட தகவல் சொல்ல மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வருவார். தவறு செய்யும் அதிகாரிகள் எங்கு இருந்தாலும் விடமாட்டோம். தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அடுத்ததாக இணையப்போகும் கட்சி பாஜக தான். ஸ்டாலின் குடும்பமே செந்தில் பாலாஜியை நம்பிக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக ஒன்றை தெரிவிக்கிறேன். செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in