`நீதிமன்றத்தில் ஒன்று, தேர்தலை சந்திக்கும்போது ஒன்று'- பாஜகவை விளாசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

`நீதிமன்றத்தில் ஒன்று, தேர்தலை சந்திக்கும்போது ஒன்று'- பாஜகவை விளாசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

``இலவசம் தொடர்பாக நீதிமன்றங்களில் ஒரு கருத்தையும், தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் பொழுது திட்டங்களை அறிவிப்பதில் ஒரு கருத்தையும் கொண்ட அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன'' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

கோவை கொடிசியா மைதானத்தில் வரும் 25-ம் தேதி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்காக அரங்கு அமைக்கும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆய்வுப்பணி நடத்த உள்ளார். பின்னர் கொடிசியா மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரை வழங்க உள்ளார்.

தமிழக முதலமைச்சர் கோவை மாவட்டத்தில் இதுவரை 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கியுள்ளார். தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் இருக்கிறார். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.

இலவச திட்டங்களுக்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றம் வரை செல்கின்றனர். தேர்தல் வரும் போது அதே இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுத்து வாக்காளர்களை சந்திக்கும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. நீதிமன்றங்களில் ஒரு கருத்தையும், தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் பொழுது திட்டங்களை அறிவிப்பதில் ஒரு கருத்தையும் என இருவேறு கருத்துக்களை கொண்ட அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்ல வேண்டும். மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் மகளிர் பலர் பயனடைந்துள்ளனர். மகளிர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் உன்னதமான திட்டம். இதனை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா காலத்தில் ரூபாய் நான்கு ஆயிரம் வழங்கினார். சிலருக்கு அவதூறு பரப்பவேண்டும். அவதூறு கருத்துக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.

நல்ல முயற்சி என்பதால் நீதிமன்றமே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தியுள்ளது. வரும் 31-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் மின் இணைப்பு உள்ள 2.67 கோடி பேரில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஆதாரை இணைத்துள்ளனர். வரும் 31-ம் தேதி வரை எவ்வளவு பேர் முழுவதுமாக இணைத்துள்ளனர் என்ற கணக்கீடு வந்த பிறகு முதல்வரிடம் கூறி அதன் பின் என்ன செய்யலாம் என முடிவெடுக்கப்படும். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சில அரசியல் இயக்கங்கள் அரசியல் சூழலுக்காக சமூக வலைதளங்களில் பரப்பும் தவறான கருத்துகளை நம்ப தேவையில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in