`உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி அண்ணாமலை கோஷ்டிதான்'- கிண்டல் செய்த செந்தில் பாலாஜி

`உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி அண்ணாமலை கோஷ்டிதான்'- கிண்டல் செய்த செந்தில் பாலாஜி

``உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி அண்ணாமலை கோஷ்டிதான். ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி படித்தவர்கள் உலகத்திலேயே இங்கே தான் பார்த்திருப்பீர்கள்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உள்ளாட்சித் தினத்தையொட்டி கோவையில் வார்டு கமிட்டிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் ஒட்டுமொத்தமாக அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய குறைகளை எடுத்துச் சொல்லி நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. இந்தியாவிற்கு முன் உதாரணமாக தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இந்த கூட்டம் நடந்திருக்கிறது. மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு ஒவ்வொரு துறைகளுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

மின்வாரியத்தின் சார்பில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து என்னுடைய தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அதுபோல ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களும் 24 நேரமும் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மின் வாரியத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள், அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, தயவு செய்து பாஜகவுடைய மாநிலத் தலைவராக உள்ள அரசியல் கோமாளி பற்றிய செய்திகள் குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும். உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி எது என்று பார்த்தேன். அந்த காமெடியை நீங்கள் (செய்தியாளர்கள்) பார்த்திருப்பீர்கள். அதாவது, ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி படித்தவர்கள் உலகத்திலேயே இங்கே தான் பார்த்திருப்பீர்கள். யார் என்றால் நீங்கள் சொன்ன கோமாளியைத் தான் பார்த்திருப்பீர்கள். அந்தக் கோயில் கோட்டை ஈஸ்வரன் கோயில். அங்கே உட்கார்ந்து கந்த சஷ்டி படித்தார்கள் என்று செய்திகள் வந்தன. தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இதைவிட கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால் கோமாளி பற்றி, கோமாளி சொல்லக்கூடிய கருத்துக்களை பற்றிய கேள்விகளை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என ஒட்டுமொத்தமாக இன்று அரசு எந்திரம் முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் நாட்டு மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று நிறைவேற்றக்கூடிய உள்ளாட்சித் தினத்தை முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சபை கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in