`உருப்படியாக எந்த திட்டத்தையும் செய்யவில்லை; ஒன்றிய அரசுக்கு பயந்து ஆட்சி நடத்தியவர் ஈபிஎஸ்'- அமைச்சர் சேகர்பாபு சாடல்

`உருப்படியாக எந்த திட்டத்தையும் செய்யவில்லை; ஒன்றிய அரசுக்கு பயந்து ஆட்சி நடத்தியவர் ஈபிஎஸ்'- அமைச்சர் சேகர்பாபு சாடல்

"கடந்த ஆட்சியில் ஒன்றிய அரசுக்கு அடிமை சாசனமாக இருந்து பயந்து பயந்து ஆட்சியை நடத்தி உருப்படியான எந்த திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வராதவர் எடப்பாடி பழனிசாமி" என்று அமைச்சர் சேகர் பாபு கடுமையாக விமர்சித்தார்.

மழை நீர் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சியில் இன்று அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏற்கெனவே உட்புற பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் 95 சதவீதம் அளவுக்கு வெளியேற்றப்பட்டு இருக்கிறது. அந்த நீர் வெளியேற்றப்பட்ட பிறகு அங்கு இருக்கிற கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதிகளில் மக்களுக்கு எந்த உபாதைகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போடும் பணி ஒருபுறமும், தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

தொடர் நடவடிக்கையாக எங்கு எல்லாம் மழை நீர் தேங்கி நின்றதோ அந்த பகுதிகளில் முதல்வர் கடந்த காலத்தில் பார்வையிட்டு வரும் காலத்தில் சென்னையில் பெரு வெள்ளத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அவரது தீவிர நடவடிக்கையால் ஆண்டாண்டு காலமாக தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில் எல்லாம் இன்றைக்கு தண்ணீர் தேங்காத நிலை இருக்கிறது. இன்றைக்கு பத்திரிகைகள் மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் பாராட்டும் வகையில் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி நிர்வாகத்தின் சீர்கேடு காரணமாக மாம்பலம் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் தேங்கி இருந்த நிலையை நீங்கள் அறிவீர்கள். தற்போது அந்த பகுதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்கவில்லை.

கடந்த முறை பெருமழை வெள்ளம் ஏற்பட்ட போது வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகின்றபோது இரவு 12 மணிக்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு முதல்வர் வருகை தந்தார். அப்போது இடுப்பளவு தண்ணீர். அவரது வாகனத்தை போர்டிகோ வந்து நிறுத்தி அவரை கைப்பிடித்து தான் மாநகராட்சியின் உள்ளே அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது. இப்போது பாருங்கள் சென்னையில் மாநகராட்சியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கி நிற்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் முதல்வரின் இந்த ஒன்றரை ஆண்டுகால தொடர் நடவடிக்கை தான். ஒரு சில தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது 90% தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது. மேற்கொண்டு இவையெல்லாம் குறிப்பு எடுத்துக் கொண்டு வருகின்ற நாட்களில் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு திருவிக மண்டலத்தில் 17 சென்டிமீட்டர் மழை பெய்தது. இப்போது அதே திருவிக பகுதியில் 32 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டு அதிகமான மழை பெய்தும்கூட பாதிப்பு என்பது கடந்த ஆண்டு ஒப்பிடும்போது 20% கூட இந்த பகுதியில் இல்லை. அதிலும் தென் சென்னை பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. முதல்வர் எங்களைப் போன்ற அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், உள்ளாட்சி பிரதிநிதிகளையும், மேயரையும், அரசு அதிகாரிகளையும் வட சென்னைக்கு அதிக கவனம் செலுத்த சொல்லி இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்து கிடந்த நிர்வாகத்தை தலை நிமிர்ந்து வைத்திருக்கிறார் முதல்வர். நிச்சயம் அடுத்து வரும் காலங்களில் தண்ணீர் தேங்காத சூழ்நிலையை சென்னை பெருநகர மாநகராட்சியும் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வோம். பட்டாளம் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தது உண்மை. தற்போது நீர் வடிந்து வருகிறது. அதற்கும் நிரந்தர தீர்வு காண்பதற்கு ஃபேஸ் ஒன் ஃபேஸ் 2 என இரண்டு பணிகளை எடுத்து மேற்கொண்டு வருகிறோம். 2015-ம் ஆண்டு பெருமழையை ஒப்பிடுகிறோம். அன்றைக்கு இப்போது முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின் சுற்றாத இடங்களே இல்லை. அதன்பிறகு 2020-ம் ஆண்டு பெய்த மழையால் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சுற்றாத இடங்களே இல்லை. பெருமழை பாதிப்பு என்று சொல்கின்ற எடப்பாடி பழனிசாமி மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் சுற்றித்திரிந்திருக்க வேண்டும். எங்கேயாவது வந்தாரா? நிவாரண பணிகளை மேற்கொண்டாரா?

10 ஆண்டு காலம் மாநகராட்சியை சீரழித்தார்கள். கமிஷன் கலெக்சன் கரப்ஷன். இதை மையப்படுத்தி கொசஸ்தலை திட்டத்தில் 3500 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் விட்டார்கள். அந்தப் பணிகள் தொடரவில்லை. இப்போது அந்த பணிகளை ஏற்றுக்கொண்டு 200 கிலோமீட்டர் நீளம் கொண்ட அந்த பணியில் 40 சதவீத பணிகளை 3 ஆண்டு திட்டமான அந்த பணிகளை ஓராண்டிலே நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை நானும் கூர்ந்து கவனித்தேன். நான்கு ஆண்டுகளில் 126 கிலோமீட்டர் அளவுக்கு மழை நீர் கால்வாய் கட்டியதாக குறிப்பிட்டு இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 200 கிலோமீட்டர் நிலத்திற்கு சுமார் 700 கோடி ரூபாயில் திட்டத்தை தீட்டினார். தற்போது 156 கிலோ மீட்டர் தூரம் வரையில் மழைநீர் கால்வாய் பணிகளை முடித்து இருக்கிறார். இதிலிருந்து யார் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை தீட்டி இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அரசை குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார். இந்த அரசு விடியல் அரசு. அவர் கூறியது உண்மையல்ல. ஏழை எளிய மக்களுக்கு பயன் தரக்கூடிய அரசு சென்னையில் எங்கெல்லாம் தாழ்வான பகுதிகள் இருக்கிறதோ அடுத்த முறை மழை வருகின்ற போது நிச்சயம் மழை நீர் தேங்காத அளவுக்கு துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் செய்த பணிகளை முதல்வரின் ஆற்றல் திறமையால் ஓராண்டில் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார். நீங்கள் குறை கூறவில்லை என்றாலும் குறை கூறினாலும் எங்களுடைய பணி தொடரும். கடந்த ஆட்சியில் ஒன்றிய அரசுக்கு அடிமை சாசனமாக இருந்து பயந்து பயந்து ஆட்சியை நடத்தி உருப்படியான எந்த திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வராமல் மாநகர மக்களை காப்பாற்றுவதற்கு எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் ஆட்சி காப்பாற்றப்பட வேண்டும், கமிஷன் கலெக்சன் கரப்ஷன் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்ட ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. மக்களுக்காக பணியாற்றுகின்ற முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சென்னை மாநகரம் எப்போதும் திமுக கோட்டை. சென்னையில் இருக்கிற 22 சட்டமன்ற உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்தான். நாடாளுமன்ற உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தான். மாநகராட்சியும் திமுக வசம்தான். இன்றைக்கும் மாநகரத்து மக்கள் முதல்வரை போற்றுவார்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in