
பட்டினப் பிரவேசம் நிகழ்வின் மூலம் தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய தருமபுர ஆதீன மடத்திற்கு இன்று நேரில் சென்றிருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
தருமபுர ஆதீனத்தில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்வின்போது ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அதற்கு தடை போட்டது தமிழக அரசு. ஆனால் இந்துவாதிகளும், பாரதிய ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதை அரசியலாக்கின.
இதனால் தமிழக அரசுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. இந்த நிலையில் சில ஆதீன கர்த்தர்களை அழைத்துப் பேசிய தமிழக அரசு, பட்டினப் பிரவேசம் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இதையடுத்து எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெகு விமரிசையாக பட்டினப் பிரவேசம் நடந்து முடிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர். அண்ணாமலையும் பல்லக்கு தூக்கினார்.
இதனால் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தருமபுர ஆதீனம் இருக்கிறதோ என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டது. ஆனாலும், தமிழக அரசு ஒரு ஆன்மிக அரசு என்று பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு முன்பே பாராட்டு தெரிவித்திருந்தார் தருமபுரம் ஆதீனகர்த்தர். அது மட்டுமில்லாமல் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படுவதை விரும்பாத அவர், பட்டினப் பிரவேசம் முழுக்க முழுக்க ஆன்மிக சம்பந்தமான நிகழ்வு, இதில் அரசியல் கலக்கக்கூடாது என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அத்துடன் அரசியல்வாதிகள் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை என்றும் அவர் அப்போதே தெரிவித்திருந்தார். அதேபோல பட்டினப் பிரவேசம் நடந்து முடிந்ததும் முதலில் அவர் நன்றி தெரிவித்தது தமிழக அரசுக்கு தான். அதனால் அந்த மடத்தை வைத்து பிறர் தங்கள் ஆதாயத்துக்காக அரசியல் நடத்தினாலும், தாங்கள் எப்போதும் ஆன்மிகவாதிகள் மட்டுமே என்பதை அப்போது தருமபுர ஆதீனகர்த்தர் உறுதியாக வெளிக் காட்டினார்.
இதையடுத்தே இன்று தருமபுர ஆதீன மடத்திற்கு வருகை தந்திருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
தருமபுரம் ஆதீனத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஞான சம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அவர் திறந்து வைத்தார். அத்துடன் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், ஆதீனகர்த்தர் உடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு அவர் தொடங்கி வைத்தார். அங்குள்ள பாடசாலை மாணவர்களையும் சந்தித்து அளவளாவினார்.
அதற்கு முன்னதாக இன்று அதிகாலையிலேயே தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற சேகர்பாபு, அங்குள்ள அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதிகளில் வழிபட்டார். அத்துடன் அறநிலையத்துறை சார்பிலான சில ஆய்வுப் பணிகளையும் அவர் மேற்கொண்டார்.
அறநிலையத் துறை அமைச்சரின் இந்த வருகையால் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்பதை தருமபுரம் ஆதீனம் தரப்பிலும் தமிழக அரசு தரப்பிலும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார்கள்.
படங்கள்: ப.ராஜராஜன்