
ஆந்திரா மாநிலம் பெரும் கடனில் சிக்கித் தவிக்கிறது என்று மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரியின் குற்றச்சாட்டுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் ஆந்திரா பாஜக தலைவர் புரந்தேஸ்வரி சந்தித்துப் பேசினார். அப்போது, ஆந்திர மாநில அரசு, நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை வரம்புக்கு மேல் கடன் வாங்கியதாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஆந்திரா மாநிலம் பெரும் கடனில் சிக்கித்தவிப்பதாக பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கூறியிருப்பது நகைப்புக்குரியது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது ஆந்திரப் பிரதேசம் கடன் வாங்குவது மிகவும் குறைவு. சந்திரபாபு நாயுடுவின் அடிச்சுவட்டுகளை பாஜக மாநில தலைவர் ஏன் பின்பற்றுகிறார்? சந்திரபாபுவின் தவறான செயல்களால் தான் மாநிலக்கடன் நிலுவையில் உள்ளது. பட்ஜெட் மேலாண்மை வரம்புகளின் கீழ் கடன் வாங்கியதற்காக ஆளும் அரசை புரந்தேஸ்வரி தாக்குவது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.