'குறை சொல்லவில்லை, தாமதிக்கிறார் என்றுதான் சொல்கிறோம்': அமைச்சர் ரகுபதியின் விளக்கம் யாருக்கு?

'குறை சொல்லவில்லை, தாமதிக்கிறார் என்றுதான் சொல்கிறோம்':  அமைச்சர் ரகுபதியின் விளக்கம் யாருக்கு?

தமிழக ஆளுநரைக் குறை சொல்லவில்லை. தாமதிக்கிறார் என்றே சொல்கிறோம். அரசு தரப்பில் எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்யும் அவலநிலை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம், ரத்து செய்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் திமுக அரசை வலியுறுத்தினர்.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு அன்றைய தினமே ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் மசோதா கடந்த அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அந்த சட்ட மசோதா குறித்து ஆளுநர் தமிழக அரசிற்கு சில கேள்விகளை எழுப்பி கடிதம் அனுப்பியிருந்தார். அதற்குத் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் ரகுபதி கடந்த 1-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து விளக்கமும் அளித்தார். அதன் பின்பு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, " ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் வகையில் இந்தியாவிற்கே முன்மாதிரியான சட்டத்தை இயற்றியுள்ளோம். அவசரச் சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அவசரச் சட்டத்திற்கு அரசாணை வெளியிடாதற்கான காரணத்தை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். மேலும் ஆளுநரிடம் இதுகுறித்து நேரில் வலியுறுத்தியுள்ளோம். ஆளுநரைக் குறை சொல்லவில்லை. தாமதிக்கிறார் என்றே சொல்கிறோம். அரசு தரப்பில் எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in