பூமி சின்னத்துக்கு ஓட்டுக்கேட்ட திமுக அமைச்சர்

பூமி சின்னத்துக்கு ஓட்டுக்கேட்ட திமுக அமைச்சர்

மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குக்கேட்டு கடந்த 4 நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இன்று அவர் 77வது வார்டு பகுதியான சுப்பிரமணியபுரத்தில், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு பூமி (உலக உருண்டை) சின்னத்தில் ஓட்டுக்கேட்டார். திமுக மற்றும் கூட்டணி கட்சி கொடிகள் கட்டிய வாகனத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவர், சுயேச்சை வேட்பாளருக்காக ஓட்டுக்கேட்டது வார்டு மக்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, "மதுரையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 9 வார்டுகளை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியிருந்தோம். அதில் இந்த வார்டும் ஒன்று. இங்கே காங்கிரஸ் வேட்பாளராக பேச்சி என்பவர் களமிறக்கப்பட்டிருந்தார். திடீரென அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டார். தான் கர்ப்பமாக இருப்பதால், பிரச்சாரம் செய்வது கடினம் என்று அதற்குக் காரணமும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த வார்டில் ஏற்கெனவே சுயேச்சையாக வேட்புமனு செய்திருந்த பிரதாப் என்பவரையே, தங்கள் வேட்பாளராக அறிவித்தது திமுக காங்கிரஸ் கூட்டணி. அவருக்கு பூமி (உலக உருண்டை) சின்னம் ஒதுக்கப்பட்டதால், அமைச்சர் பூமிக்கு ஓட்டுக்கேட்டார்" என்றார்கள்.

முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பேச்சி கீழ்மதுரையைச் சேர்ந்தவர் என்றும், உள்ளூர் வேட்பாளரையே அறிவிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கோரியதால்தான் அவர் வாபஸ் பெற வைக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. துணை மேயர் அல்லது மண்டலத் தலைவராக தன்னுடைய மனைவியை ஆக்கிவிட வேண்டும் என்று உழைக்கும் மிசா பாண்டியன், இந்த சுயேச்சை வேட்பாளரின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in