'செம்மண் குவாரி வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது': அமைச்சர் பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

'செம்மண் குவாரி வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது': அமைச்சர் பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சட்டவிரோதமாகச் செம்மண் எடுத்து இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரும் அமைச்சர் பொன்முடியின் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2006-2011ம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாகச் செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகன் கவுதம் சிகாமணி மற்றும் அவர்களின் உறவினர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசுக்கு 28.7 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யக் கூடிய விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரின் மனுவை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்மண் குவாரி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் பொன்முடி மனுத்தாக்கல் செய்தார். வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகள், வாக்குமூலங்கள் அடிப்படையில் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரணை நடத்த போதுமான ஆதாரம் உள்ளது. அதனால் அமைச்சர் பொன்முடியை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது எனக் கூறி பொன்முடியின் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in