கிராமசபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி: பாதியிலேயே வெளியேறிய அமைச்சர் பொன்முடி

கிராமசபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி: பாதியிலேயே வெளியேறிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடியை  அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். இதனால்  கூட்டத்திலிருந்து பாதியிலேயே அமைச்சர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.  விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெற்ற  கிராமசபைக் கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர்  பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதிகள் குறித்து கிராம மக்கள் தங்களின் குறைகளைச் சொன்னார்கள்.  குடிநீருக்காக  வெகு தொலைவு செல்ல வேண்டி இருப்பதாகவும் அவர்கள் முறையிட்டனர்.

அவர்களுடைய  கோரிக்கைகளை கேட்ட அமைச்சர்  பொன்முடி, இன்னும் 10 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். ஆனால், அமைச்சரின் உறுதிமொழியை ஏற்காத பொதுமக்கள் தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை  பொன்முடி சமாதானப்படுத்த முயற்சித்தார்.  ஆனாலும்  அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். 

இந்த நிலையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதிதான் ஆட்களை அனுப்பி இப்படி பிரச்சினையை செய்கிறார்  என  கூறிய அமைச்சர் பொன்முடி, அங்கிருந்து பாதியிலேயே  வெளியேறினார். கிராம சபை கூட்டத்திலிருந்து அமைச்சர் பாதியிலேயே வெளியேறதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் ஓசி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் செய்தியாளர்கள் சந்திப்பை திடீரென முடித்துக் கொண்டு வெளியேறியது போலவே எங்களின் கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாமல் அமைச்சர் வெளியேறினார் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in