`கட்டாயப்படுத்தாதீங்க; இந்தி மொழியை விரும்பிப் படிப்பவர்கள் படிக்கட்டும்'- ஆளுநருக்கு பொன்முடி பதிலடி

`கட்டாயப்படுத்தாதீங்க; இந்தி மொழியை விரும்பிப் படிப்பவர்கள் படிக்கட்டும்'- ஆளுநருக்கு பொன்முடி பதிலடி

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்லர். இந்திக்கும் எதிர்ப்பானவர்கள் அல்லர் எனக் கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “பெண்களைப் படிக்க அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கிய காலம் மலையேறிவிட்டது. தற்போது அதே தாய் தனது பெண்களை ஆர்வத்தோடு பள்ளிக்கு அனுப்புவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் பெரியார் மண்; அதுதான் திராவிட மாடல்! பெரியாரின் கொள்கைகள், ஆண், பெண் என எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய காரணத்தால்தான், இந்திய மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 53 சதவீதத்தினர் உயர்கல்வி பயின்றிருக்கிறார்கள். கன்னியாகுமரியில் படித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அவர்களாக இருந்தாலும் சரி, விழுப்புரத்தில் பயின்ற நானாக இருந்தாலும் சரி எல்லோரும் தமிழ் வழியில்தான் பள்ளிப்படிப்பைப் பயின்றிருக்கிறோம். இன்று அகில இந்திய அளவில் உயர் பதவியில் இருக்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன். நானும் பி.எச்டி. பட்டமெல்லாம் வாங்கி இருக்கிறேன். ‘நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல். இந்திக்கும் எதிரானவர் அல்ல. இந்தியை விரும்பிப் படிப்பவர்கள் படிக்கட்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்’ என மேடையிலிருந்த தமிழக ஆளுநர் என்.ஆர். ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி முடித்தார்.

Related Stories

No stories found.