
தனது அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, க.பொன்முடி பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது கடந்த 2002-ம் ஆண்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் அதிமுக அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு பின்னர் வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிலிருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பல்வேறு வாதங்களை முன் வைத்தார்.
குறிப்பாக, பொன்முடியின் அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே, வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
எனவே, அந்த கடிதத்தை தங்களுக்கு வழங்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதி, இது தொடர்பாக நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து வாதிட்ட பொன்முடி தரப்பு வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ததாகவும், 9 மாதங்கள் விசாரித்த பின்னர் வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி தரப்பினரை நீதிபதி விடுவித்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், 4 நாட்களில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விசாரணையை ஏற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். வழக்கின் மீது அதிக ஊடக வெளிச்சம் காரணமாக, பொன்முடி தரப்பினரை குற்றவாளியாக சித்தரிப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே, வேலூர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை விரிவாக வைப்பதற்கு அவகாசம் வழங்க கோரி டிசம்பர் 27-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி. எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நீண்ட காலத்திற்கு ஒத்தி வைக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் பொன்முடியை விடுதலை செய்த விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு துறையின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாகவும், அதற்குள் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துவிட்டதாகவும் கூறினார்.
இருப்பினும் லஞ்ச ஒழிப்பு துறையின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை வருகிற நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.