போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி

போராட்டம் செய்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி அப்பகுதியில் உள்ள ஒருவரை ஒருமையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

``பாத்ரூம், பெட்ரூமை தவிர மற்ற இடங்கள் பொது இடங்கள் என ஆகிவிட்டது. எல்லா இடத்திலும் நம்மைக் கண்காணிக்கிறார்கள். பொதுவெளியில் அமைச்சர்களும், கட்சியினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுக்குழுவில் பேசியிருந்தார். ஆனாலும் தொடர்ந்து திமுகவினர் பொதுவெளியில் பேசும் பேச்சுகள் அதிர்வலையைக் கிளப்பி வருகிறது. சமீபத்தில் சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசிய பேச்சுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சித்தலிங்கமடம் ஊராட்சி. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொகுதியில் இந்த ஊராட்சி அடங்கியிருக்கிறது. இந்த ஊராட்சியை இரண்டாகப் பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வருவாய் துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணிப்பு செய்தனர். மேலும் கடையடைப்பு நடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. தகவல் அறிந்து போராட்டம் செய்யும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பொன்முடி அப்பகுதிக்கு வந்தார்.

அப்போது அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்ட மக்கள், அவரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சலசலப்புக்கு மத்தியில் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, ஒருவரை ஒருமையில் திட்டினார். மேலும், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். உங்களை யாரோ தூண்டிவிடுகிறார்கள் என்றார் பொன்முடி. அமைச்சரின் கடுமையான வார்த்தைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in