
``நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதா, மாநில அரசை பாதிக்குமென்றால் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், "தமிழ்நாட்டில் திமுக அறிவித்தபடி கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி இதுவரை 5 ஆயிரத்து13 கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.
கடந்த ஆண்டு விவசாய கடன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 292 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் 12,000 கோடி ரூபாய் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 8941.13 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.72 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த 7-ம் தேதி கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. இது கூட்டுறவு சங்கத்தேர்தல் முறையில் சீர்த்திருத்தம், கூட்டுறவு சங்கத்தில் வெளிப்படைத் தன்மை, நிர்வாகத்தை வலுப்படுத்துதல் தொடர்பானது.
இது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும், அதனால் நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டுமென எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளை பிடுங்கி வருகிறது. கூட்டுறவு திருத்த சட்ட மசோதா விவகாரத்தில் மாநில உரிமையை தமிழக முதலமைச்சர் விட்டுக் கொடுக்கமாட்டார்" என தெரிவித்தார்.