'வெட்கத்தை விட்டு சொல்கிறேன், மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள்': அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதல்

திருச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம்
திருச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம்

அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயந்து கொண்டிருக்கிறார்கள் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பது தமிழக அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் , வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கே.என்.நேருவுக்கு மீண்டும் முதன்மை செயலாளர் பதவி அளிக்கப்பட்டதற்கு தலைமைக்கு நன்றி தெரிவித்தும்,  திருச்சிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு பேசுகையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சியினர் போல்  செயல்பட்டு வருகிறார். பாஜகவோ தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதிமுக இரண்டாக உடைந்து இருப்பதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் பாஜக அதிமுகவை ஒன்று சேர விடாமல் மேலும் பிளவு படுத்தி தமிழகத்தில் அதிமுகவின் இடத்தை பிடிக்க   முயன்று கொண்டிருக்கிறது.

நான் வெளிப்படையாக சொல்கிறேன், வெட்கத்தை விட்டு சொல்கிறேன், இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள். எனவே, இப்போது நாம் எப்படி பலமாக இருக்கிறோமோ அப்படியே  கூடுதல் பலமோடு செயல்பட்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் நாம் பிடிக்க வேண்டும். திருச்சியில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் அனைத்து இடங்களிலுமே நாம் வெற்றி பெற்றதை தீர்மானிக்கும். திருச்சி என்ன நினைக்கிறதோ, அதுதான் தமிழ்நாட்டில் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சங்கடங்கள் வருகிறது. அவற்றை சரி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும்"  என்று பேசினார்.

தமிழக அரசின் முக்கிய பொறுப்பு வகிக்கும்  அமைச்சர் நேரு இப்படி வெளிப்படையாக தமிழக அரசின் அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயந்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசியிருப்பது அதிகாரிகள் மத்தியிலும்,  அரசியல்வாதிகள்  மத்தியிலும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in