
" மத்திய அரசு சொல்லித்தான் சொத்து வரியை உயர்த்தினோம் என்று அமைச்சர் நேரு பொய் சொல்வதாக" பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழக அரசு திடீரென சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. கரோனா தொற்றால் தொழில்கள் நலிவுற்றும், வருமானம் குறைந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது.
மக்களின் எதிர்ப்பைக் கண்டவுடன் அமைச்சர் நேரு, இந்த தடாலடி சொத்து வரி உயர்வுக்கு நீண்ட விளக்கம் அளித்து உள்ளார். அதில் உண்மைக்கு புறம்பாக 'மத்திய அரசு சொல்லிதான் நாங்கள் வரியை உயர்த்தினோம்' என்று பொய்யாக குறிப்பிடுகிறார்.
எந்த இடத்திலும் மத்திய அரசின் ஆணையில் சொத்து வரியை உயர்த்தச் சொல்லவே இல்லை. தாறுமாறாக சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களைச் சந்திக்க துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.