மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்Siva SaravananS

அண்ணாமலை எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுக்கட்டும்... எங்களுக்குக் கவலையில்லை!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என்று சொல்லி வந்த அண்ணாமலை, அதன் முதல்படியாக இரண்டு துறைகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி சில ஆவணங்களையும் வெளியிட்டார். அதில், சுகாதாரத் துறையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹெல்த் மிக்ஸிலும், அயர்ன் சிரப்பிலும் முறைகேடு நடந்திருக்கிறது. இதனால் அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு என்பதும் முக்கிய குற்றச்சாட்டு. இதை மறுத்து அரசு தரப்பிலும் அமைச்சர் தரப்பிலும் அறிக்கைகள் வெளியான நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசினோம்.

கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கிறதே... எப்படி சமாளிக்கிறீர்கள்?

முதல் இரண்டு அலைகள்தான் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மூன்றாவது அலை பெரிய பாதிப்பில்லாமல் போனது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல், ஜலதோஷத்தோடு குணமடைந்து விடுகிறார்கள். கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட 9 ஆயிரம் பரிசோதனைகளில் 270 பேருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் அவர்களைக் குணப்படுத்தி இருக்கிறோம். பெரும்பகுதியான கல்லூரி மாணவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடமிருந்து தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன விடுதிகளிலும் தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம்.

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?

உலக அளவில் 24 நாடுகளில் குரங்கு அம்மையின் பாதிப்பு இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் இல்லை. சென்னை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் யாராவது வருகிறார்களா என தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். நானும் அவ்வப்போது விமான நிலையங்களில் சோதனை செய்கிறேன். இதையும் மீறி குரங்கு அம்மை தமிழகத்தில் நுழைந்தால் அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம்.

சுகாதாரத்துறையில் எந்த மாதிரியான சவால்களை எதிர் கொள்கிறீர்கள்?

பெரும்பாலான கிராம மக்கள், மலைவாழ் மக்கள் வழக்கமாகச் செய்து கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்வதில்லை. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய் பிரச்சினைகள் உள்ளவர்கள், பொது முடக்கக் காலங்களில் தொடர்ச்சியாக மருந்துகளைப் பெறுவதில் சிக்கல் இருந்து வந்தது. இதனால் தொற்றா நோய்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, அவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதும் குறைந்து விட்டது. இதனால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த சவாலை எதிர்கொள்வதற்குத்தான் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம் இப்போது 73 லட்சம் பேர் பலனடைந்து வருகிறார்கள். தொற்றா நோய்களினால் ஏற்படும் உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது.

சுகாதாரத்துறையில் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறாரே?

அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்றாலும், அதற்கு நாங்கள் தெளிவாகப் பதில் சொல்லி இருக்கிறோம். ஆவினில் ஹெல்த் மிக்ஸ் என்பதே கிடையாது. ஆவின் நிறுவனத்திற்கு சென்று ஒரு ஹெல்த் மிக்ஸையாவது அவரை வாங்கி வந்து பொதுமக்களிடம் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். ஆவின் நிறுவனத்தின் கடந்த நிதி நிலை அறிக்கையில், ‘நாங்கள் ஹெல்த் மிக்ஸ் தயார் செய்யப் போகிறோம். அது குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கானது. இது தமிழக அரசு செயல்படுத்தும் கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து பெட்டகத்துக்கு உதவாது’ என தெரிவித்தார்கள்.

அதன்படி இன்னும் குழந்தைகளுக்கான ஹெல்த் மிக்ஸையே இன்னும் தயார் செய்யவில்லை. இப்படி இருக்க, இல்லாத ஒரு ஹெல்த் மிக்ஸுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து, அதை வாங்கி இருந்தால் விலை குறைவு எனச் சொல்வது கேலிக் கூத்தான விஷயம். தற்போது வாங்கப்பட்டுவரும் ஹெல்த் மிக்ஸ்கூட இந்த அரசாங்கம் முடிவு செய்தது கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில் 2018-லிருந்தே இந்த ஹெல்த் மிக்ஸ்தான் வாங்கப்படுகிறது. இதன் மார்க்கெட் விலையை விட நாங்கள் வாங்கும் ஹெல்த் மிக்ஸ் 136 ரூபாய் விலை குறைவு. இதில் நிதி இழப்பு எப்படி வந்தது?

அயர்ன் சிரப் வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளதாகச் சொல்கிறாரே?

இதுவும் பழைய அரசாங்கம் மூலமாக ஏற்கெனவே வாங்கிவந்ததுதான். மூன்று பாட்டில்கள் அடங்கிய பேக்கிங்கின் விலை என அதில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அண்ணாமலை ஒரு பாட்டிலின் விலையை எடுத்துக்கொண்டு மூன்று பாட்டில்களில் விலையோடு ஒப்பிட்டுக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை. அயர்ன் சிரப்பில் நிறைய குவாலிட்டி, வெரைட்டி இருக்கிறது. நாங்கள் வாங்கும் அயர்ன் சிரப் மார்க்கெட்டில் விலை குறைவாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டுமே தவிர, வேறொரு அயர்ன் சிரப் பாட்டிலோடு ஒப்பிடக் கூடாது. ஆப்பிளை ஆரஞ்சு பழத்தோடு ஒப்பிடலாம். எலுமிச்சை பழத்தோடு ஒப்பிட முடியாது.

ஆவினில் ஊட்டச் சத்து பெட்டகத்தை வாங்கத் தயார் என எப்படிச் சொன்னீர்கள்?

புரோமிக்ஸில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான 32 ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இதேபோல ஆவினில் தயார் செய்தால் வாங்குவோம் என்றுதான் சொல்லி இருக்கிறேன். ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க ஆய்வு செய்வதற்கே குறைந்தபட்சம் இரண்டு மாதம் ஆகும். அதற்கு அரசு அனுமதி சான்றிதழ் பெற்று விலை நிர்ணயம் செய்வதற்கு நான்கைந்து மாதங்களாவது ஆகும். அதன் பிறகுதான் சந்தையில் விற்கப்படும் எனச் சொல்கிறார்கள். அப்படி சந்தைக்கு வந்து, அது தரமானதாக இருந்தால், தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச் சத்தாக இருந்தால் வாங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்.

ஆடிட்டர் சண்முகராஜாவும், அண்ணாநகர் கார்த்திக் என்பவரும்தான் சுகாதாரத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்வது பற்றி..?

அவர்கள் இதில் எப்படித் தலையிடப் போகிறார்கள். டெண்டரே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொழில்நுட்பம் மற்றும் நிதி உள்ளிட்டவற்றை கொட்டேஷனில் பார்த்தால்தான் ஒப்பந்தம் யாருக்குக் கிடைக்கும் என்பதே தெரியும். அதற்குள் இவருக்குத்தான் கொடுக்க போகிறோம் எனக் குத்துமதிப்பாகச் சொல்கிறார் அண்ணாமலை.

அடுத்த ஊழல் அமைச்சர்களின் பட்டியலையும் விரைவில் வெளியிடுவோம் என்கிறாரே அண்ணாமலை?

அவர் எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும் நாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறோம். அவரது குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்போகிறோம். எங்கு வேண்டுமானாலும் அவர் புகார் கொடுக்கட்டும், எங்களுக்குக் கவலை இல்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in