
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சீனியரான ரகுபதிக்கும் ஜூனியரான மெய்யநாதனுக்கும் இம்முறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இருவருக்கும் போட்டி வந்துவிடக்கூடாது என்பதால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக அனுப்பப்பட்டார் மெய்யநாதன். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரகுபதி பொறுப்பு அமைச்சர் என்பதால் மாவட்டத்தில் அதிகம் தலையிடாமல் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் வலம்வந்து கொண்டிருந்தார் மெய்யநாதன்.
இந்த நிலையில், தன்வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை உதயநிதி ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுத்ததற்குப் பிறகு மெய்யநாதன் ரொம்பவே மாறிவிட்டாராம். புதுக்கோட்டை மாவட்டத்தில் என்ன நடந்தாலும் அதில் தன்னையும் அழைக்க வேண்டும் என்று இப்போது கறார் காட்டுகிறாராம். அண்மையில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் நடந்த குளறுபடிக்கு பின்னணியில் இருந்ததும் அமைச்சர் தானாம். உள்ளூர் அரசியலை விட்டுவிடக் கூடாது என்ற மெய்யநாதனின் பிடிவாதத்தை தெரிந்துகொண்ட அதிகாரிகள் தற்போது மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மெய்யநாதனிடம் ஒப்பீனியன் கேட்டுக் கொண்டுதான் ஏற்பாடு செய்கிறார்களாம்!