ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு அனுமதிக்காது: அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்

ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு அனுமதிக்காது: அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்

தமிழகத்தில் மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் எங்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு அனுமதிக்காது என்று தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் கிணறுகள் உள்ளது. அதில் கடந்த 2013-ம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. அதனை எடுத்து மக்களின் எதிர்ப்பால் அந்த கிணறு மூடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பவும் அந்த கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி ஆயத்தமானது. அப்பகுதி மக்களின் கடும் போராட்டத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தமிழகத்தில் அனுமதி தரப்படவில்லை. அதனால் பழைய கிணறுகளில் இருந்து மீண்டும் எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பெரியகுடியிலுள்ள பழைய கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி திட்டமிட்டது. அதற்காக ஒப்புதல் வேண்டி தமிழக அரசு அணுகிய நிலையில் அந்த கிணற்றைப் பயன்படுத்துவது குறித்த மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதனையடுத்து நேற்று நடைபெற இருந்த கருத்து கேட்டு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மெய்யநாதன், "பழைய கிணறு அல்லது புதிய கிணறு எதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் அப்படி எங்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்காது" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in