பைக், டிராக்டர், நீரில் நடந்து சென்று சீர்காழி மக்களுக்கு உதவி செய்யும் அமைச்சர் மெய்யநாதன்!

பைக், டிராக்டர், நீரில் நடந்து சென்று சீர்காழி மக்களுக்கு உதவி செய்யும் அமைச்சர் மெய்யநாதன்!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு பைக், டிராக்டரில் சென்று அமைச்சர் மெய்யநாதன் மக்களுக்கு சாப்பாடு, நிதியுதவிகளை வழங்கி வருகிறார். அவரது செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. அதே நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பெய்து அந்த மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டதால் செய்வது அறியாது மக்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும் அமைச்சர் மெய்யநாதனை அங்கிருந்து பணியாற்றும்படி முதல்வர் உத்தரவிட்டார். இந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி உள்ளிட்ட ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். டிராக்டர், பைக்கில் செல்லும் அமைச்சர் மெய்யநாதன் தண்ணீரில் இறங்கி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று என்ன தேவை என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறார். மக்களுக்கு தேவையான உணவுகளையும் அவர் வழங்கி வருகிறார்.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் வேட்டங்குடி ஊராட்சி குமரக்கோட்டகம் பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கிடப்பதை அமைச்சர் பார்வையிட்டு விவசாயிகளின் காேரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினார். மேலும், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பெருக்கெடுத்து ஓடும் கூலி ஆற்றைப் பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். வேட்டங்குடி ஊராட்சி வெள்ளக்குளம் பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி அமைச்சர் ஆறுதல் கூறினார்.

இதைத் தொடர்ந்து பழையார் மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட்ட அமைச்சர், மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கான உரிய அரசு உதவிகள் விரைந்து கிடைத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் புதுப்பட்டினம் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல்கூறி அவர்களுக்கு அமைச்சர் நிவாரணம் வழங்கினார். தொடர்ந்து சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பம்பரம் போல் அமைச்சர் மெய்யநாதன் சூழன்று வரும் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in