`என்னிடம் வரட்டும், நான் கற்று கொடுக்கிறேன்'- பாஜகவை விளாசும் அமைச்சர் மனோ தங்கராஜ்

`என்னிடம் வரட்டும், நான் கற்று கொடுக்கிறேன்'- பாஜகவை விளாசும் அமைச்சர் மனோ தங்கராஜ்

"மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள்தான் பாஜகவினர். ஆன்மிகத்தை மதவெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் பாஜகவினர்" என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர்.காந்தி யார்?. எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? பொதுமக்களே கோயிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத்துறையும் அரசாங்கமும் ஒன்று தான் என்று கூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர். காந்திக்கு அமைச்சர் கோயிலுக்குள் வர கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது?

1996-ம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த காலத்திலிருந்தே பல கோயில் விழாக்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டு வருகிறேன். குமரி மாவட்டத்தில் முதல்வரின் உத்தரவின் பெயரில் கோயில்களில் 50 கோடி ரூபாய்க்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன. இதனை பாஜகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லையா?

பிரிவினைவாத அரசியல் செய்ய முயலும் பாஜகவை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர்.

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நன்றி அறிவித்தல் நிகழ்ச்சிக்கு முறைப்படி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள்தான் பாஜகவினர். திமுகவினர் எல்லா மதங்களையும் மதிக்ககூடியவர்கள். ஆன்மிகத்தை மதவெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் பாஜகவினர். பாஜகவினருக்கு ஆன்மிகம் பற்றி படிக்க ஆசையிருந்தால் என்னிடம் வரட்டும் நான் கற்று கொடுக்கிறேன்" என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in