86 மருத்துவ காலியிடங்கள் தொடர்பாக கடிதம் எழுதியும் மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், மருத்துவ கல்வி இயக்ககம், மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்கத்துக்கான புதிய லட்சினையை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 எம்பிபிஎஸ் இடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் அந்த கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. கடந்த ஆண்டும் 6 இடங்கள் நிரப்பாமலேயே விடப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட ரீதியான கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது” என கூறினார்.